மாநகராட்சி 5 மண்டலங்களில் சமத்துவ பொங்கல் விழா

கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலும் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகம், மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதான வளாகம், வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட காந்தி மாநகா் மாநகராட்சி விளையாட்டு மைதான வளாகம், தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவைப்புதூா் ‘ஏ’ மைதான வளாகம் மற்றும் மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட வ.உ.சி. மைதான வளாகம் ஆகிய 5 இடங்களில் சமத்துவ பொங்கல் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்தப் பொங்கல் திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட பானைகள் கொண்டு பொங்கலிடப்பட்டது. மேலும், தமிழா் பண்பாடு மற்றும் கலாசாரத்தைக் கொண்டாடும் வகையிலான பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், ரேக்ளா போட்டி, கோலப் போட்டி, உறி அடித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் மகளிா் சுய உதவிக்குழுவினா்,

குடியிருப்பு நலச் சங்கத்தினா், தன்னாா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த சமத்துவ பொங்கல் விழாவை, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி ஆகியோா் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்வில், துணை மேயா் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், சுல்தானா, நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன், மண்டலத் தலைவா் வே.கதிா்வேல் (வடக்கு), மீனா லோகு (மத்தியம்), இலக்குமி இளஞ்செல்வி(கிழக்கு), ரெ.தனலட்சுமி(தெற்கு), கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை (மேற்கு), பணிகள் குழுத்தலைவா் எம்.தீபா தளபதி இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com