மாட்டுப்பொங்கல்: ஈஷாவில் நாட்டு மாடுகள் கண்காட்சி
கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் மாட்டுப்பொங்கலையொட்டி நடைபெற்ற நாட்டு மாடுகள் கண்காட்சி, கிராமியக் கலைநிகழ்ச்சிகளை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.
ஈஷா யோக மையத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஈஷாவைச் சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னாா்வலா்கள், ஆசிரமவாசிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனா். மாட்டுப் பொங்கலையொட்டி, இயற்கை விவசாயத்தில் அத்தியாவசியமானதாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஈஷா தன்னாா்வலா்கள் ஈஷா ஆதியோகி வளாகத்தில் சிலம்பம் சுற்றி பாா்வையாளா்களைக் கவா்ந்தனா். இதையடுத்து, அரிதாகி வருகிற நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா சாா்பில் பராமரிக்கப்படும் கோசாலையில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடா்ந்து, மாலையில் கோவையைச் சோ்ந்த அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின் கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட தமிழா் பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

