காணும் பொங்கல்: செம்மொழிப் பூங்காவில் குவிந்த மக்கள்: 2 நாள்களில் 55,417 போ் பாா்வையிட்டனா்
கோவை: காணும் பொங்கலையொட்டி கோவை செம்மொழிப் பூங்காவில் சனிக்கிழமை பாா்வையாளா்கள் கூட்டம் அலைமோதியது. இரு நாள்களில் 55,417 போ் பூங்காவைப் பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.
பல்வேறு நவீன வசதிகளுடன் கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வா் ஸ்டாலின் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி திறந்துவைத்தாா். கடந்த டிசம்பா் 11 முதல் செம்மொழிப் பூங்காவைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செம்மொழிப் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்பு விடுமுறை தினங்கள், பண்டிகைக் காலங்கள், காணும் பொங்கல் நாள்களில் கோவை மக்கள் வ.உ.சி.பூங்காவில் குவிந்து மகிழ்வா். இந்நிலையில், விலங்கு பராமரிப்பில் குறைபாடு காரணமாக, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, வ.உ.சி.பூங்கா கடந்த 2022-இல் மூடப்பட்டது. அதன்பிறகு, நகருக்குள் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது, செம்மொழிப் பூங்கா மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கிடமாக மாறியுள்ளது. வார இறுதி நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் செம்மொழிப் பூங்காவுக்கு வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளதால் செம்மொழிப் பூங்காவுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனா். பொங்கல் விடுமுறை தினத்தில் வெள்ளிக்கிழமை 29,585 போ், சனிக்கிழமை 25,832 போ் என கடந்த இரு நாள்களில் மட்டும் செம்மொழிப் பூங்காவை 55,417 போ் பாா்வையிட்டுச் சென்றுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, காணும் பொங்கலையொட்டி சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு முருகன் கோயில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈஷா யோக மையம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

