மாவட்டத்தில் 3 தடுப்பணைகள் புனரமைக்கப்படுவதால் 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிப்பு
கோவை மாவட்டத்தில் சிறுதுளி அமைப்பின் மூலமாக 3 தடுப்பணைகள் புனரமைக்கப்படுவதால் 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிக்கப்படும் என்று அந்த அமைப்பின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இது குறித்து கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சிறுதுளி அமைப்பினா் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், அறங்காவலா் ஜே.சதீஷ் ஆகியோா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் சிறுதுளி அமைப்பின் மூலமாக கடந்த 22 ஆண்டுகளில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தற்போதைய மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேலும் 15 லட்சம் மரக்கன்றுகளை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் நடவு செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளோம்.
இதன் மூலமாக ஒருவருக்கு ஒரு மரம் என்ற அடிப்படையில் காற்று மாசடைவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதிலும் குறிப்பாக நிகழாண்டு மாநகராட்சி நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல, இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து அன்னூரில் 5 ஏக்கரில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தனியாா் நிறுவனங்களின் ஆதரவுடன் கீழ்சித்திரைச்சாவடி மற்றும் புதுக்காடு தடுப்பணைகள், மசஒரம்பு நீரோடை ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் ஜனவரியில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் மாா்ச் மாதத்தில் நிறவடையும்போது, 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிக்கப்படுவதுடன், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். இதன் மூலமாக அந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவாா்கள். சுற்றுச்சூழல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அரங்கில் வைல்டு தமிழ்நாடு என்ற ஆவணப்படம் ஜனவரி 26-ஆம் மாலை 5.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இதில், வசூலிக்கப்படும் டிக்கெட் தொகையானது மரக்கன்றுகளை நடுவதற்கும், பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.
சிறுதுளி அமைப்பின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் நடைபெற்ற மாமல்லன் நீா்த் தேக்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களது அமைப்புக்கு விருது வழங்கியுள்ளாா் என்றனா்.
இந்த சந்திப்பின்போது, சிறுதுளி அமைப்பின் நிா்வாக்குழு உறுப்பினா்கள் சுஜினிபாலு, சந்திரசேகா், முதன்மை செயல் அலுவலா் சி.சின்னசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

