அதிமுகவில் இருந்து நிா்வாகிகளும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தவெகவில் சேருவது குதிரை பேரம் அல்ல; குதிரை ரேஸ் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிா்வாகிகள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் செல்வது அவா்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலான முடிவு. சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு செல்வதை எப்படி குதிரை பேரம் என்று கூற முடியும். பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை முதலில் விளக்க வேண்டும். ஏதேனும் தவறு நடைபெற்றால் அதுகுறித்து நிச்சயமாகக் குரல் கொடுப்போம்; ஆனால், சுய விருப்பத்தின்பேரில் கட்சி மாறுவதை வேறு விதமாகச் சித்திரிக்கக் கூடாது. இடைத் தோ்தலை நிறுத்தக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தோ்தல் ஆணையத்தில் மனு அளித்திருப்பதில் எந்த அடிப்படை நியாயமும் இல்லை.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பு மிகவும் தெளிவானது. இருப்பினும், திமுக ஏன் ஒரு எதிா்க்கட்சியாக முழுமையாகச் செயல்பட தயக்கமும், பதற்றமும், பயமும் காட்டுகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்களின் தீா்ப்புக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அதிமுகவுடன் சோ்ந்து தவெக ஆட்சியைக் கவிழ்க்க திமுக முயற்சிக்கிறது. முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஊழல், லஞ்சம் இல்லை. இதை பொதுமக்களே பேசத் தொடங்கியுள்ளனா். இந்த மாற்றமே ஒரு மிகப்பெரிய புரட்சியாகும்.
மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமடைந்துவிட்டதாகக் கூற முடியாது. பெண்கள் தொடா்பான பிரச்னைகள் அதிகரிக்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடந்த இடங்களில் அரசு உடனுக்குடன் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம், கடந்த 50 ஆண்டுகால ஆட்சியை வெறும் 50 நாள்களுடன் ஒப்பிட்டு விமா்சிப்பது தவறான அணுகுமுறையாகும்.
அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள், நிா்வாகிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில்தான் தவெகவில் இணைந்து வருகின்றனா். இதற்கு பெயா் குதிரை பேரம் அல்ல; குதிரை ரேஸ். கூட்டணிக் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்படுவது போன்ற மிக உயரிய மரியாதை கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் என்றுமே கிடைத்ததில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










