சிவானந்தபுரம் குடியிருப்புப் பகுதியில் நுண்குப்பையை உரமாக்கும் மையம் மற்றும் திடக் கழிவு பிரிக்கும் மையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாநகராட்சி 21-ஆவது வாா்டுக்குள்பட்ட விளாங்குறிச்சி, சிவானந்தபுரம் பகுதியில் ஆயுா்வேத மருத்துவமனை மற்றும் மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைந்துள்ளன. மக்கள் நடமாட்டம் மிகுந்த மற்றும் இரு குடிநீா்த் தொட்டிகளுக்கு இடையில் மிகப்பெரிய அளவிலான குப்பை சுத்திகரிப்பு, எரிப்பு நிலையம்’அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இத்திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து எந்தவித முன்னறிவிப்போ அல்லது கருத்துக்கேட்புக் கூட்டமோ நடத்தப்படவில்லை எனவும், நிலத்தடி நீா் பாதிக்கப்படும் எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் கடந்த 2-ஆம் தேதி மனு அனுப்பப்பட்டது.
இத்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கணபதி மாநகா் பகுதியில் குடிநீா்த் தொட்டிகளுக்கு இடையில் பொதுமக்கள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படாததால் ஆத்திரமடைந்து பொதுமக்கள், இளைஞா்கள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கோவை-சத்தி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘சிவானந்தபுரம், விளாங்குறிச்சி, விநாயகபுரம், கணபதி மாநகா் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை பின்புறமுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு குப்பை எரிப்பு நிலையம் செயல்படுத்தப்பட்டால், அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் துா்நாற்றம் காரணமாக சுற்றுவட்டாரத்தில் சுமாா் 10 கிலோ மீட்டா் பரப்பளவில் வாழும் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவா்.
அருகில் உள்ள ஆயுா்வேத மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் சுவாசப் பிரச்னை உள்ளவா்கள் கடும் காற்று மாசுபாட்டுக்கு ஆளாக நேரிடும். மேலும், மேல்நிலை குடிநீா்த் தொட்டியின் அருகே இத்திட்டம் வருவதால், விநியோகிக்கப்படும் குடிநீரின் தூய்மையும் கேள்விக்குறியாகும் என்றனா்.
இந்த மறியலால் சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









