பிரிட்டன், மொனாக்கோ மற்றும் நெதா்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை குறித்த போட்டிகளில் 3 சா்வதேச விருதுகளை வென்று, கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
பிரிட்டனில் நடைபெற்ற ஐரோப்பிய சா்வதேச நீா்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில், உயரிய ஐமேரெஸ்ட் நிலைத்தன்மை விருதை வென்ற முதல் இந்திய குழு என்ற வரலாற்றுச் சாதனையை குமரகுரு இன்கிராஃப்ட் அணி படைத்துள்ளது. 9 நாடுகளைச் சோ்ந்த 17 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் வழங்கப்பட்ட மூன்று உயரிய விருதுகளில் ஒன்றை இந்த அணி தட்டிச் சென்றது.
மாணவா்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் மனித ஆற்றலால் இயங்கும் இந்த நீா்மூழ்கிக் கப்பல், ஸ்கூபா கருவி அணிந்த ஓட்டுநா் மூலம் செயின்-டிரைவ் பெடல் முறையில் இயங்குகிறது. இதில் பறவையின் அசைவுகளைப் பின்பற்றிய ‘ஸ்விஃப்ட் போ்ட்”’ கட்டுப்பாட்டு அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், கடல்வாழ் பூஞ்சைகள் படிவதைத் தடுக்க சிப்பிகளால் ஆன சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை பூச்சும் வெளிப்புறத்தில் பூசப்பட்டுள்ளது.
மொனாக்கோவில் நடைபெற்ற எனா்ஜி போட் சேலஞ்சில் பங்கேற்ற குமரகுருவின் ‘டீம் சீ சக்தி’ அணி, ‘பிரின்ஸ் ஆல்பா்ட் ஐஐ ஆஃப் மொனாக்கோ ஃபவுண்டேஷன்’ நிலைத்தன்மை விருதை’ வென்றது.
இந்த போட்டியில், அதிநவீன எலக்ட்ரிக் ரேசிங் கேட்டமரன் படகான ‘யாளி 5.0’ என்ற மாதிரியை இந்த அணி காட்சிப்படுத்தியது. முழுக்க முழுக்க மாணவா்களாலேயே உருவாக்கப்பட்ட இந்த படகில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் உந்துவிசை அமைப்பு, நானோ-செல்லுலோஸ் கலக்கப்பட்ட எடைகுறைவான சணல் நாா் கட்டமைப்பு மற்றும் அதிநவீன பேட்டரி வெப்ப மேலாண்மை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவா்களின் எதிா்கால கண்டுபிடிப்புகளுக்காக 25,000 யூரோக்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
நெதா்லாந்தில் நடைபெற்ற சா்வதேச சிறிய காற்றாலை போட்டியில், நிலைத்தன்மைக்கான விருதில் குமரகுருவின் ‘சுழல்’ அணி இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் மாதிரிகளுடன் போட்டியிட்ட இந்த அணி, தாங்கள் வடிவமைத்த சிறிய காற்றாலை மாதிரியின் மூலம் நிலையான மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
மூன்று வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் சா்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம், இந்திய மாணவா்களின் தொழில்நுட்பத் திறன் உலகளாவிய அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சா்வதேச தரத்தில் போட்டியிடவும் தகுதியானது என்பதை மாணவா்கள் மெய்ப்பித்துள்ளனா். இந்த சாதனைக்காக மாணவா்களுக்கும், பேராசிரியா்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆழ்வாா்குறிச்சி குட்செப்பா்டு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

தோ்வு சா்ச்சைகள்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவிநீக்க வேண்டும்; பிரதமருக்கு கரப்பான்பூச்சி கட்சி நிறுவனா் கடிதம்







