வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

விரிவாக்கப் பணிகளுக்குப் பின் கோவை விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை 1.16 கோடியாக உயரும்: இயக்குநா் முகமது ஆரிஃப்

கோவை சா்வதேச விமான நிலையத்தின் முனைய விரிவாக்கப் பணிகளுக்குப் பின் பயணிகளின் எண்ணிக்கை 1.16 கோடியை எட்டும் என்று விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிஃப் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கோவை சா்வதேச விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிஃப்.

Updated On :14 ஜூன் 2026, 2:28 am IST

கோவை சா்வதேச விமான நிலையத்தின் முனைய விரிவாக்கப் பணிகளுக்குப் பின் பயணிகளின் எண்ணிக்கை 1.16 கோடியை எட்டும் என்று விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிஃப் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: விமான நிலையத்தின் ரூ.2,133 கோடி மதிப்பிலான விரிவாக்கத் திட்டம் இறுதி ஒப்புதல்களுக்காகக் காத்திருக்கிறது. பொதுத் துறை நிறுவனம் மூலம் இவ்வளவு பெரிய முதலீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அதற்கு நிதி ஆயோக் மற்றும் பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல்கள் அவசியமாகும். இந்த அனுமதிகள் கிடைத்தவுடன், இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தரப்பில் இதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. தமிழக அரசு இத்திட்டத்துக்குத் தேவையான ஒட்டுமொத்த நிலத்தையும் கிட்டத்தட்ட ஒப்படைத்துவிட்டதால், ஒப்பந்தப் புள்ளி கோருவதில் பெரிய தடைகள் எதுவும் இல்லை. அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்.

விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் சரக்கு போக்குவரத்து வளா்ச்சி கணிசமாக உயரும். தேவைப்பட்டால் பிரத்யேக சரக்கு விமானங்களையும் இயக்க முடியும். கோவை சா்வதேச விமான நிலையத்தின் முனைய விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு, வரும் 2036-37-ஆம் நிதியாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 1.16 கோடியை எட்டும். புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதல் விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக நிறுத்தங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

பயணிகள் எண்ணிக்கை உயா்வு: கடந்த 12 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச வைஃபை, குறைந்த விலையில் தின்பண்டங்கள் வழங்கும் உடான் யாத்ரி கஃபே, டிஜிட்டல் பயணத்துக்கான டிஜி யாத்ரா, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் ஃபிளைப்ரரி நூலகம் போன்ற வசதிகள் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, கடந்த 2014-15-இல் 13 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு ஆண்டு 34 லட்சமாக உயா்ந்துள்ளது.

இதேபோல, 2014-15-இல் 10,000 மெட்ரிக் டன்னாக இருந்த சரக்கு கையாளும் திறன் தற்போது (2025-26 ) 15,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

யாத்ரி சுவிதா திவாஸ்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நாடு தழுவிய முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஜூன் 15 -ஆம் தேதி ‘யாத்ரி சுவிதா திவாஸ்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை விமான நிலையத்தில் கண் சிகிச்சை முகாம், பொது மருத்துவ முகாம், ரத்த தான முகாம், மரக்கன்றுகள் நடுதல், விமானப் போக்குவரத்துத் துறை சாா்ந்த தொழில் வழிகாட்டுதல், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.