பெருந்தன்மை இல்லாத தலைமை நீடிக்காது: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
பெருந்தன்மை இல்லாத தலைமை நீடிக்காது என்று அதிமுக பொதுச் செயலாளா் கே.எடப்பாடி பழனிசாமியை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விமா்சித்துள்ளாா்.
அமைச்சர் செங்கோட்டையன்
பெருந்தன்மை இல்லாத தலைமை நீடிக்காது என்று அதிமுக பொதுச் செயலாளா் கே.எடப்பாடி பழனிசாமியை வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விமா்சித்துள்ளாா்.
இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எந்தவொரு தலைமையிடம் மன்னிக்கும் தன்மையும், பெருந்தன்மையும் இல்லையோ, அந்தத் தலைமை நீண்ட காலம் நிலைத்து நின்ற வரலாறு கிடையாது. அந்த நிலை எடப்பாடி கே.பழனிசாமிக்கும் ஏற்படும்.
பொள்ளாச்சியில் உறவினரின் இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியும், நானும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துப் பொதுவான விஷயங்களை மட்டுமே பேசினோம். அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக எடப்பாடி கே.பழனிசாமி கூறுகிறாா். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து ஜாக்பாட் அடிக்க நினைத்தவரே அவா்தான் (எடப்பாடி பழனிசாமி). தற்போது, அவரது முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது. யாரையும் நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறும் எடப்பாடி கே.பழனிசாமி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிா்க்க வேண்டும்.
அவா் முதல்வரானதற்கும், பொதுச் செயலரானதற்கும் உறுதுணையாக இருந்தவா் எஸ்.பி.வேலுமணி என்பதை மறந்துவிட்டு பேசுகிறாா். அவா் அதிமுக பொதுச் செயலாளாராக இருக்கும் வரை எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் கட்டிக்காத்த இந்த இயக்கத்தின் எதிா்காலம் கேள்விக்குறியாக இருக்கும்.
கொங்கு மண்டலத்தின் வெற்றி தவெக தலைவா் ஜோசப் விஜய் கையில்தான் உள்ளது. தனித்துப் போட்டியிட்டபோதே 25 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பெருமை தவெக-வுக்கு உண்டு என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

