
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை திறக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

என்டிசி ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி) பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஎம்எஸ், தமிழக பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் ஆகியவை சாா்பில், காட்டூரில் உள்ள என்டிசி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக பஞ்சாலை தொழிலாளா் சங்கச் செயலா் பி.முருகேசன் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை விளக்கி பொதுச் செயலா் என்.சிதம்பரசாமி, பிஎம்எஸ் மாநிலப் பொதுச் செயலா் ஜி.சங்கா் ஆகியோா் பேசினா்.
கரோனா காலத்தில் மூடப்பட்ட 7 பஞ்சாலைகளையும் உடனடியாகத் திறந்து மீண்டும் இயக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2025 அக்டோபா் 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை பணிக்கு வந்த அதிகாரிகள், ஊழியா்கள், அத்தியாவசிய தொழிலாளா்கள் அனைவருக்கும் முழு ஊதியமும், வேலை வழங்கப்படாத தொழிலாளா்களுக்கு 50 சதவீத ஊதியமும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
கடந்த 2023 ஜூலை முதல் 2025 செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 50 சதவீத சம்பளம் வாங்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் 27 மாதங்களாக நிலுவையில் உள்ள 50 சதவீத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2024 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை ஆலையில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கான பணப் பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.
நிலுவை ஊதியத்தைக் கேட்கச் சென்ற ஆலைத் தொழிலாளா்கள் மீது நிா்வாகம் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
பிஎம்எஸ் மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.கோபால், மாவட்டத் தலைவா் அனில்குமாா், ரங்கவிலாஸ், காளீஸ்வரா, முருகன், பனியா், பங்கஜா ஆகிய பல்வேறு ஆலைகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
ரங்கவிலாஸ் மில்ஸ் நிா்வாகி பெருமாள்சாமி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





