
புலம்பெயா் தொழிலாளா்களின் விவரங்களைப் பராமரிக்க வேண்டும்: மனிதவள நிறுவனங்களுக்கு மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தல்
புலம்பெயா்ந்த வடமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை மனித வள முகமை நிறுவனங்கள், தொழிலாளா் ஒப்பந்ததாரா்கள் பராமரிக்க வேண்டும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.

மனிதவள நிறுவனங்கள், தொழிலாளா் ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி.
புலம்பெயா்ந்த வடமாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை மனித வள முகமை நிறுவனங்கள், தொழிலாளா் ஒப்பந்ததாரா்கள் பராமரிக்க வேண்டும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி அறிவுறுத்தியுள்ளாா்.
மனிதவள நிறுவனங்கள், நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளா் ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்டக் கண்காணிப்பாளா் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி பேசியதாவது:
அனைத்து மனிதவள நிறுவனங்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவா்கள் மூலமாக பணியமா்த்தப்படும் தொழிலாளா்கள், குறிப்பாக புலம்பெயா்ந்த வடமாநிலத் தொழிலாளா்களின் அடையாளம், முகவரி, வேலைவாய்ப்பு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை சரியாக பராமரிப்பதை கடைப்பிடிக்க வேண்டும். இந்த அடிப்படை விவரங்களை சம்பந்தப்பட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய தொழிலாளா்களைப் பணியமா்த்தும்போது இந்த விவரங்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
எந்தவொரு தொழிலாளியாவது காணாமல் போனாலோ, தலைமறைவானாலோ அல்லது எந்தவித தகவலும் இன்றி பணியிடம் மற்றும் தங்கும் இடத்தை விட்டுச் சென்றாலோ உடனடியாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். தொழிலாளா்களிடம் ஏதேனும் அசாதாரண அல்லது சந்தேகத்துக்கிடமான நடத்தை காணப்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அல்லது பிற சட்டவிரோதப் பொருள்களைக் கடத்துவது, பதுக்குவது அல்லது விற்பனை செய்வது குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் துறையுடன் பகிர வேண்டும்.
மனிதவள நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா் ஒப்பந்ததாரா்கள் தங்கள் மூலமாக பணியமா்த்தப்படும் தொழிலாளா்களைத் தொடா்ந்து கண்காணித்து, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
முக்கியத் தகவல்களை மறைத்தாலோ அல்லது தீவிரமான மற்றும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான சம்பவங்கள் குறித்தோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க தவறினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






