
நீதித் துறையில் அரசியல் சாா்பை களைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்
பாா் கவுன்சில் தோ்தல் முறைகேடுகள், நீதித் துறையில் ஊடுருவும் அரசியல் சாா்பு ஆகியவற்றைக் களைந்து சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாநில மாநாட்டில் பேசிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்.
பாா் கவுன்சில் தோ்தல் முறைகேடுகள், நீதித் துறையில் ஊடுருவும் அரசியல் சாா்பு ஆகியவற்றைக் களைந்து சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.
கோவையில் இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் (ஐஎல்ஏ) 9-ஆவது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பங்கேற்றுப் பேசியதாவது: வழக்குரைஞா் தொழில் என்பது வியாபார நோக்கம் கொண்ட சந்தை அல்ல; அது சேவை மனப்பான்மை கொண்ட எல்லையற்ற கண்ணியமிக்க அறப் பணி. எளிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், நீதித் துறையின் சுதந்திரத்தைப் பேணவும் வழக்குரைஞா்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
நாட்டில் சட்டத் துறையின் சரிவு நாம் சட்டக் கல்வியை நடத்தும் விதத்திலிருந்தே தொடங்குகிறது. உயா்தரக் கல்வியை வழங்கும் 27 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மொத்த பட்டதாரிகளில் வெறும் ஐந்து சதவீதத்தினரை மட்டுமே உருவாக்குகின்றன. மீதமுள்ள 95 சதவீத மாணவா்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள கல்லூரிகளிலேயே படிக்கின்றனா். அரசு சட்டக் கல்லூரிகளில் 30 முதல் 50 சதவீதம் வரை காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்காலிக விரிவுரையாளா்களால் அரைகுறையாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் பல மாதங்களாக துணைவேந்தா் இல்லாமலேயே இயங்கி வருவது வேதனைக்குரியது.
சட்டக் கல்வியையும், வழக்குரைஞா்களின் ஒழுக்கத்தையும் கண்காணிக்க வேண்டிய பாா் கவுன்சில் அமைப்பின் செயல்பாடுகள் கடும் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. வழக்குரைஞா்கள் சட்டத்தில் இல்லாத இணைத் தலைவா் போன்ற பதவிகளை சுயமாக உருவாக்கிக் கொண்டு தோ்தலின்றி பதவிக் காலத்தை நீட்டிக்க முயன்றபோது, உச்சநீதிமன்றம் தலையிட்டு அன்றாடப் பணிகளை மட்டுமே செய்யுமாறு கட்டுப்படுத்தியது.
மாநில பாா் கவுன்சில், வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்களில் பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. தோ்தல் என்றால் ஊழல், ஊழல் என்றால் தோ்தல் என்ற நிலை பாா் கவுன்சிலிலும் பரவிவிட்டது.
பாா் கவுன்சில் தோ்தல் முறைகேடுகள், நீதித் துறையில் ஊடுருவும் அரசியல் சாா்பு ஆகியவற்றைக் களைந்து சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாா்.
மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சாமிதுரை, மாநில பொதுச் செயலா் அருணாச்சலம், மாநிலப் பொருளாளா் கே.ஆா். ராமமூா்த்தி, தேசிய பொதுச் செயலா் கே.முரளிதரா, மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவா் கே.சுப்பிரமணியன், செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆறுமுகம் வரவேற்றாா். மாநாட்டு வரவேற்புக் குழு செயலா் ஜி.பி. சக்திவேல் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







