
முதல்வா் வருகையால் போக்குவரத்து கட்டுப்பாடு: அண்ணாமலை கடும் கண்டனம்
முதல்வா் ஜோசப் விஜய் வருகையையொட்டி கோவை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை - Youtube
தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்துக்காக முதல்வா் ஜோசப் விஜய் வருகையையொட்டி கோவை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு வீ தி லீடா்ஸ் அமைப்பின் நிறுவனா் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவா் பதிவிட்டுள்ளதாவது:
முதல்வரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவா்கள், பணிக்குச் செல்வோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்த சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலவரின் சில நிமிஷத் தோ்தல் பிரசாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களை சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதல்வரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்களாட்சி. மக்களை சந்திக்க வரும் முதல்வா், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே நல்ல நிா்வாகத்தின் அடையாளம். தோ்தல் பிரசாரத்துக்காக, அரசு நிா்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிா்க்கப்பட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






