கொடுமுடி அருகே கிணற்று நீரை உறிஞ்ச இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தைச் சுற்றிலும் மண்டிக் கிடக்கும் முள்புதர் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடுமுடி பேரூராட்சிக்கு உள்பட்ட நகப்பாளையம் 1-ஆவது வார்டு அருந்ததியர் காலனிக்கு உள்பட்ட கிணறு மற்றும் அருகில் நீரை உறிஞ்சும் மின்சார இயந்திரம் அறை அமைந்துள்ளது. இதைச் சுற்றிலும் முள்புதராக உள்ளது. அத்துடன்
ஆக்கிரமிப்புகளும் இருக்கின்றன.
இதுகுறித்து சமுக ஆர்வலர் மா.ஆறுமுகம் மற்றும் நகப்பாளையம் அருந்ததியர் காலனி பொதுமக்கள் கூறியதாவது: 1000 க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வரும் இப் பகுதி குடிநீர் பயன்பாட்டுக்காக சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு வெட்டப்பட்டது. இதில் கயிறு கட்டி வாளி மூலம் நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். தற்போது நகப்பாளையம் அருந்ததியர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சிறிய மேல்நிலைத் தொட்டியில் கிணற்று நீரை ஏற்றி மக்கள் குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். நீர் உறிஞ்சும் மின் இயந்திரத்துக்காக கட்டடமும் உள்ளது. தற்போது அறையை சுற்றிலும் முள்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அதுமட்டுமன்றி தேங்காய் மட்டைகள்,தென்னை மட்டைகள் ஆக்கிரமித்துள்ளதால் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் அங்கு உள்ளன. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.