நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க ரூ. 3.70 கோடியில் கட்டமைப்பு வசதிகள்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்க அரசு சார்பில் ரூ. 3.70 கோடியில் கட்டமைப்பு
Updated on
1 min read

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையில் விபத்துகளைத் தடுக்க அரசு சார்பில் ரூ. 3.70 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. 
 விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தார்.
 பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 குமாரபாளையத்திலிருந்து பெருந்துறை வழியாக செங்கப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையில் 13 இடங்கள் விபத்துகள் அதிகமாக நடக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதில், பெருந்துறை பகுதி சாலையில் 11 இடங்களில் விபத்துகள் அதிகமாக நடக்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு சாலை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையில்  பெருந்துறை, காஞ்சிக்கோவில்  பிரிவில் ரூ. 1.50 கோடி மதிப்பில் உயர்மின் விளக்கு கோபுரம் (ஹைமாஸ் லைட்), 8 கண்காணிப்பு கேமராக்கள்,  சாலை சந்திப்பை எச்சரிக்கை செய்யும் விளக்கு ஆகியன அமைக்கப்படவுள்ளன.
 மேலும், தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையில் பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு, துடுப்பதி பிரிவு ஆகிய இடங்களிலும், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மூலம் ரூ. 1.20 கோடியில் விபத்துகளைத் தடுக்கும் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இப்பகுதியில், மேம்பாலம் அமைக்க ரூ. 23 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான உத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
 இதில், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி, காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) ரமேஷ், காவல் ஆய்வாளர் சுகவனம், ஒன்றியச் செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com