மரபணு மாற்றப்பட்ட விதைகளில் உருவான உணவுப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் திங்கள்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெற்றது. முகாமில், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 252 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கொடுமுடி வட்டம், சிவகிரி, ஜீவா தெருவைச் சேர்ந்த இளம் பெண் சாருலதாவின் பெற்றோரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ஜெயராமன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, ஆட்சியரிடம் பி.அய்யாக்கண்ணு அளித்த மனு விவரம்: விவசாய விலை பொருள்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமலும், சாகுபடி செய்ய தண்ணீர் கொடுக்காமலும் மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகிறது. விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்றுவிட்டு ஓடிவிட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்கி பெட்ரோல், மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதுடன் சோலார் சிஸ்டத்தை உருவாக்கி நிலத்தடி நீர் மட்டத்தை 2 ஆயிரம் அடிக்கு கீழே கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர், குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காத நிலத்தை விற்காத விவசாயிகளுக்கு சாகுபடி செய்ய முடியாது. தமிழகம் பாலைவமனாக மாறிவிடும்.
இதில், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் உற்பத்தி செய்த உணவுப் பொருள்களை மக்களுக்குக் கொடுத்து, ஆண்களுக்கு ஆண்மை இழப்பையும், பெண்களுக்கு கருத்தரிக்கும் சக்தியை இழக்கச் செய்யவும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்வதுடன் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி, குளம், கண்மாய்களைத் தூர்வாரியும், சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு நதிகளை தேசிய மயமாக்கி அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை தென்னகத்துக்கு குறிப்பாக தமிழகத்துக்குத் திருப்பிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா நிலத்தில் மண் எடுப்பதைத் தடுக்கக் கோரிக்கை: பெருந்துறை தாலுகா, முள்ளம்பட்டி கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் தெரு பகுதியில் வசித்து வரும் எல்.சரோஜினி என்பவருக்குச் ( புலஎண் 123/3, 7) சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக சுமார் 50 நடை மண் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், சுமார் 15 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. 10.04.2018-ஆம் தேதி மண் எடுத்துக் கொண்டிருந்தபோது மண் எடுப்பதைத் தடுத்தபோது, புதுப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் வெங்கட்ராஜ் என்பவர் மண் எடுக்கச் சொன்னதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டு போடப்பட்ட வழித்தடத்தை மறித்து சுமார் 10 அடி ஆழத்துக்கு தோண்டி விவசாய பூமிக்குச் செல்லவிடாமல் தடுத்து வருகிறார்கள். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, நிலத்தில் மண் எடுப்பதைத் தடுத்து, பாதையில் தோண்டப்பட்ட வழியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஓடத்துறை கண்மாய்க்கு தண்ணீர் விடக் கோரிக்கை: பவானி வட்டம், ஓடத்துறை கிராமத்தில் அமைந்துள்ள குளம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய் ஆகும். கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர் வறட்சி காரணமாக குளம் வறண்டுவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இந்த குளம் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், கால்நடை, விவசாயம் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தது. தற்போது நீர் இல்லாததால், கடும் பஞ்சத்தை நோக்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. இக்கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் பரிசீலித்து ஓடத்துறை மக்களுக்குத் தேவையான நீரைத் திறந்துவிட பரிந்துரை செய்தது. அதன்படி, நீர்வள ஆதாரத் துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர்.
அதேபோல, எல்பிபி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் எல்பிபி வாய்க்காலில் முதல் சுற்றுப் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தனது மாவட்ட மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, இந்த முறையாவது ஓடத்துறை குளத்துக்கு நீரை திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.