மென்பொருள் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.
சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் 18 ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவர் எஸ்.வி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பேசியதாவது:
மென்பொருள் துறையில் இந்தியா சிறந்த நாடாகத் திகழ்கிறது. அதேசமயம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது. பல்வேறு திறமைகளை கொண்டுள்ள நாடு என்பதால் தொழில்நுட்பத்தில் மாணவர்கள் புதுமைகள் செய்யவேண்டும். மருத்துவம், தொலைத்தொடர்பு, சென்சார் போன்ற துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும். காற்று, நீர், கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றார்.