தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் திங்களூர் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பவர் கிரீட் கார்ப்பரேஷன் நடத்திய, எரிசக்தி சேமிப்பு குறித்து தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 4, 5, 6-ஆம் வகுப்புகள் ஏ பிரிவாகவும், 7, 8, 9-ஆம் வகுப்புகள் பி பிரிவாகவும் பிரித்து பள்ளி அளவில் ஓவியப் போட்டி நடத்தி ஏ பிரிவில் 2 படமும், பி பிரிவில் 2 படமும் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறாக தமிழகம் முழுவதும் 12,260 பள்ளிகளில் 2, 91,908 மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த படங்களை சென்னைக்கு அனுப்பியதில் 26,880 படங்கள் அடங்கும்.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் 52 பேர் தேந்தெடுக்கப்பட்டு சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த திங்களூர் எம்.பி.தெ. அரசு மேல்நிலைப் பள்ளி 6-ஆம் வகுப்பு மாணவர் கே.சந்தோஷ், ஏ பிரிவில் 3-ஆம் இடம் பெற்றார். இவருக்கு, பரிசாக ரொக்கம் ரூ. 10,000, 1,500 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேலும், இப்பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ஈ.லோகநாதன், பி பிரிவில் ஆறுதல் பரிசாக ரொக்கம் ரூ. 1,000, 1,500 மதிப்புள்ள பரிசுப் பொருள்களைப் பெற்றார். இருவருக்கும் பரிசுகளை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வழங்கிப் பாராட்டினர்.
மாநில அளவில் ஏ பிரிவில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, தில்லியில் தேசிய அளவில் ஓவியப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், திங்களூர் எம்.பி.தெ. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சந்தோஷுக்கு ஆறுதல் பரிசாக ரொக்கம் ரூ. 10,000, ரூ. 3,000 மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற மாணவர் கே.சந்தோஷை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, ஈரோடு கல்வி மாவட்ட அலுவலர் ஏ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.