ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பகுதியில் வல்லூறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெண்முதுகு வல்லூறு உள்ளிட்ட பல்வேறு வகை வல்லூறுகள் உள்ளன. இதில் குறிப்பாக திம்பம் மலைப் பகுதியில் பெல்கான் என்ற வகை வல்லூறுகள் அதிக அளவில் உள்ளன. இவை, தனக்குத் தேவையான இரையை வானில் பறந்தபடி வேட்டையாடும் தன்மை கொண்டவை. மணிக்கு 290 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த வல்லூறுகளை திம்பம் மலைப் பாதையில் அதிகமாக பார்க்கலாம். இந்த வல்லூறுகள் மலைகள் முழுவதும் உள்ள இரையைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு வேட்டையாடும் திறன்கொண்டவை. குரங்குகள், ஓணான்கள் மற்றும் சிறிய பாலூட்டிகள் வகைகள் இதற்கு பிடித்த உணவாகும். இதுமட்டுமில்லாமல், தனது கழுத்தை இரண்டு பக்கமும் 180 டிகிரியில் சுற்றி பின்னால் நடப்பதைக் கூட எளிதில் பார்க்கும் திறன் கொண்டது. இதன் தலைமீது நான்கு இறகுகள் சேர்ந்து சிறியவகை கொண்டை உள்ளது என்றனர்.
திம்பம் மலைப் பாதை வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் பலர் ஆர்வமுடன் வல்லூறுகளைத் தங்களது செல்லிடப்பேசியில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









