ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கணக்கான
Updated on
1 min read

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இக்கோயில் திருவிழா பிப்ரவரி 13-ஆம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. 19-இல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்குப் பல வகையான திரவியங்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன்  மகா தீபாரதனையும் நடைபெற்றது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்கள் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அக்னி கபால நகர்வலம், அக்னிக் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சியும், புதன்கிழமை அக்னிக் குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
இதையொட்டி, அதிகாலையில் கோயில் பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கினர். கடந்த இரு வாரங்களாக கங்கணம் கட்டிக் கொண்டு விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், முதியவர்கள், திருநங்கைகள் உள்பட  நூற்றுக்கணக்கானோர் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அக்னி குண்டத்தில் இறங்குவதற்காக கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு பால், பழம், மோர், கேப்பைக்கூழ், குளிர்பானம் உள்ளிட்ட பானங்களை தன்னார்வலர்கள் வழங்கினர்.
திருவிழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com