
ஈரோடு, கனி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட கடையைத் திறக்க முயற்சி செய்ததைக் கண்டித்து கடை ஊழியர்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்குச் சொந்தமான 40 கடைகள் கனி மார்க்கெட் பகுதியில் இயங்கி வருகின்றன. இங்குள்ள கடைகளை ஒரு நபருக்கு ஒரு கடை என்ற விகிதத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது. அதன் அடிப்படையில், 1 ஆம் எண் கடையை நீதிமோகன் என்பவரும், 2 ஆம் எண் கடையை சக்திவேல் என்பவரும் ஏலம் எடுத்தனர்.
இந்நிலையில், சக்திவேல் என்பவர் நீதிமோகனின் கடையை உள் வாடகைக்கு எடுத்து இரண்டு கடையையும் சேர்த்து ஜவுளிக் கடை நடத்தி வந்துள்ளார். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நீதிமோகனை அழைத்து ஏற்கெனவே கடை நடத்தி வரும் நபருக்கு மற்றொரு கடையை வாடகைக்கு விடுவது விதிமீறல் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நீதிமோகன் வாடகைக்கு விடப்பட்டிருந்த தனது கடையை காலி செய்ய வேண்டும் என சக்திவேலிடம் கேட்டுள்ளார். ஆனால், காலி செய்யாததால் மாநகராட்சியில் அளித்த புகாரின்பேரில் மாநகராட்சி நிர்வாகம் சக்திவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்குக் கட்டுப்படாமல் இருந்ததால் சக்திவேலின் கடையை மூடி செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட கடையை நீதிமோகன் தரப்பினர் வியாழக்கிழமை திறக்க முயற்சி செய்தபோது அதற்கு சத்திவேல் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து கடை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற நகர காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் பேச்சு நடத்தி கடை திறப்பது குறித்து மாநகராட்சியைத் தான் அணுக வேண்டும் எனக் கூறி, மறியலில் ஈடுபட்ட 6 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மறியல் காரணமாக மணிக்கூண்டு பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






