புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 10 வட்டத் தலைமையிடங்களில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த 3,308 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். 21 மாத ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணிகளுக்கு ஆசிரியர்களை பணி அமர்த்துவதைக் கைவிட வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 22 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டாம் நாளான புதன்கிழமை ஈரோடு உள்பட மாவட்டத்தின் 10 வட்டத் தலைமையிடங்களில் மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு தாலுகா அலுவலகம் எதிரே தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி எஸ்.சண்முகம் தலைமையில் நடைபெற்ற மறியலில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.பாஸ்கர் பாபு, பா.சரவணன், முத்துராமசாமி உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் நேரு மறியல் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற 406 பெண்கள் உள்பட 527 பேரையும், இதேபோல மாவட்டத்தில் உள்ள 10 வட்டத் தலைமையிடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,200 பெண்கள் உள்பட மொத்தம் 3,308 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து ஜாக்டோ, ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாஸ்கர்பாபு கூறியது: 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் எங்களை வஞ்சித்தது தமிழக அரசு. இந்நிலையில், அரசு வழக்கம்போல நீதிமன்றத்தை நாடியபோது, உண்மை நிலையை அறிந்த நீதிமன்றம் எங்கள் போராட்டத்துக்குத் தடை விதிக்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு உள்பட அனைத்து வட்டத் தலைமையிடங்களில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். ஜனவரி 24 இல் வட்ட அளவிலும், 25 இல் மாவட்ட அளவிலும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி கூறியது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் 1,410 பள்ளிகளில் 9,491 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 60 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இச்சூழலில், மேல்நிலை, உயர்நிலை, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள் மூலம் பள்ளிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சத்தியமங்கலத்தில்...: சத்தியமங்கலத்தில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சத்தியமங்கலம் வட்டாரத்தில் மலைப் பகுதி உள்ளிட்ட 83 பள்ளிகளில் 263 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இதில், 8 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல உண்டு உறைவிடப் பள்ளிகள் 3 என மொத்தம் 11 பள்ளிகள் தவிர 72 பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவாகவில்லை. தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துகின்றனர். பிற வகுப்பு மாணவர்களுக்குத் தனியார் ஆசிரியர் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளியின் கேட்டை பூட்டப்பட்டிருந்தது. இதனால், பள்ளி மாணவர்கள் வெளியிலேயே காத்திருந்தனர். அங்கு வந்த சத்தியமங்கலம் ஆரம்பப் பள்ளிக் கல்வி அலுவலர் சுப்பையா பள்ளியின் கேட்டை திறந்து தனியார் கல்லூரி ஆசிரியர் மாணவர்களை நியமித்து வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்தார்.
மொடக்குறிச்சியில்...: மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ வட்டக் கிளை ஒருங்கிணைப்பாளர் கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சின்னுசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். இதில், சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை மொடக்குறிச்சி (பொ) காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பெருந்துறையில்...: ஜாக்டோ - ஜியோ சங்கத்தின் பெருந்துறை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமையில், பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மறியலில் ஈடுபட்ட 335 பெண்கள் உள்பட 531 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பவானியில்...: பவானி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளைச் செயலாளர் செந்தாமலர் தலைமை வகித்தார். இதில், திரளான ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








