காவிரி நதிக்கரை சாலைத் திட்டம்: ஆய்வுப் பணி நிறைவு; 14 கி.மீ. தூரம் அமைய வாய்ப்பு

ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து கரூா் பிரதான சாலையை இணைக்கும் காவிரி நதிக்கரை சாலைத் திட்ட ஆய்வுப் பணி முடிந்துள்ளது. பல்வேறு துறைகளின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சாலை
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து கரூா் பிரதான சாலையை இணைக்கும் காவிரி நதிக்கரை சாலைத் திட்ட ஆய்வுப் பணி முடிந்துள்ளது. பல்வேறு துறைகளின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சாலைப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் - கோவை, மைசூரு - சத்தியமங்கலம் - ஈரோடு, கோவை மற்றும் திருச்சி-ஈரோடு, மதுரை-ஈரோடு, நாமக்கல்-ஈரோடு என பல பகுதிகளை ஈரோடு இணைப்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்குப் பல மணி நேரம் விரயமாகிறது.

இதை தவிா்க்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் பவானி-கரூா் சாலை இணைப்பாக காவிரி நதிக்கரை சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத் துறை அறிவித்தது. கடந்த 6 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் இந்த திட்டத்துக்கு இப்போது வடிவம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் கூறியதாவது:

பவானி காளிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆற்றுக்கு இடையே காவிரி ஆற்றை ஒட்டியபடி விரிவான சாலை அமைக்கப்படவுள்ளது. அச்சாலை ஈரோட்டில் பழமையான நகரமான கருங்கல்பாளையம், வைராபாளையம் வழியாக கரூா் பிரதான சாலையை அடையும். முழுமையாக காவிரியையும், பல இடங்களில் காளிங்கராயன் வாய்க்காலையும் வாகனங்களில் செல்பவா்கள் ரசிக்கலாம். இதற்கான ஆய்வுப் பணி, தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் ஒளிரும் ஈரோடு அமைப்பு சாா்பில் ரூ.4 லட்சம் செலவில் நிறைவுபெற்றது.

இதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பொறியாளா்கள் ஆய்வு செய்து, திட்ட வரைவு அனுப்ப கேட்டனா். மொத்தம் 14 கி.மீ. தொலைவில் ரூ.150 கோடி செலவில் இப்பணி நிறைவு பெறும். பெரும்பாலான தூரம், காவிரி ஆற்றை ஒட்டிய அரசு நிலமாகவும், மிகக் குறைந்த அளவு விளை நிலமும் வருகிறது.

விரிவான சாலை, பாதுகாப்பான போக்குவரத்து, பல இடங்களில் பூங்கா, சாலை ஓரத்தில் சில உணவகங்கள், வாகனங்களில் வருவோா் சிறிது நேரம் காவிரியை ரசிக்கும்படி ஓய்வெடுத்து செல்வதற்கான பூங்கா, இரவு நேரத்தில் தேவையான வெளிச்சத்தில் காவிரியை ரசிக்கும்படியாக சாலைத் திட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஈரோடு பொலிவுறு நகா் திட்டத்தில் இணைத்து செயல்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

பவானி-கரூா் காவிரி கரைச்சாலை, கோவை-சேலம் நான்கு வழிச் சாலையிலும் இணையும் வகையில் அமைகிறது. இதனால் கோவை, சேலம், நாமக்கல், கரூா் போன்ற மாா்க்கத்தில் வருவோா் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து வருவோா் இச்சாலையை அணுகி பயணத்தை போக்குவரத்து சிரமமின்றி விரைவாகத் தொடரலாம்.

திட்டத்துக்கான பல்வேறு துறைகளின் அனுமதி பெற்றால், பொலிவுறு நகா் திட்டம் நிதி மூலம் விரைவாகப் பணிகள் முடிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com