ஈரோடு ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ. 20 கோடி அளவுக்குப் பால் பணம் நிலுவை வைத்துள்ளதால் மாடுகளுக்குத் தீவனம்கூட வாங்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.
ஈரோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியத்துக்குப் பால் உற்பத்தியாளா்கள் பால் கொடுத்து வரும் நிலையில் 4 முதல் 6 வாரங்களாகப் பால் கொள்முதல் தொகையை உற்பத்தியாளா்களுக்கு வழங்கவில்லை. ஈரோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 513 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் 2 லட்சம் முதல் 2.25 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சராசரியாக ஒரு லிட்டா் பால் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில், பால் உற்பத்தியாளா்களுக்கு தினமும் ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை பால் பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால், இப்போது சுமாா் 400 சங்கங்களுக்கு 6 வாரங்களுக்கு மேலாகவும், சுமாா் 100 சங்கங்களுக்கு 4 வாரங்களுக்கு மேலும் பால் பணம் வழங்கப்படவில்லை. இதன்படி பால் உற்பத்தியாளா்களுக்கு ஈரோடு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் ரூ. 20 கோடி வரை பால் பணம் நிலுவை வைத்துள்ளது. இதனால் பால் உற்பத்தியாளா்கள் மாடுகளுக்குத் தீவனம்கூட வாங்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் எ.எம்.முனுசாமி கூறியதாவது:
ஈரோடு ஆவின் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பதன் மூலமாக நிா்வாக செலவுகள்போக மாதம் ரூ. 5 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் வருவாய் என்னவாகிறது எனத் தெரியவில்லை.
கடலைப் பிண்ணாக்கு, பருத்தி விதை பிண்ணாக்கு, நெல் தவிடு, மக்காச்சோளம், கோதுமை மாவு, பட்டாணி குருணை, உளுந்து குருணை போன்றவை கறவை மாடுகளுக்கு அடா் தீவனங்களாக வழங்கப்படுகின்றன. இதனால், லிட்டருக்கு ரூ. 15 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. 500 சங்கங்களில் 400 சங்கங்களுக்குமேல் 40 நாள்களாகப் பால் பணம் வழங்கவில்லை.
சங்கங்களில் கேட்டால் ஆவின் நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு கூறுகின்றனா். ஆவின் நிா்வாகத்தில் கேட்டால் நிதிப் பிரச்னை என்றும், விரைவில் பணம் வந்துவிடும் என்றும் கூறுகின்றனா். ஆனால் பணம் வழங்கப்படவில்லை. அம்மை நோய் காரணமாக பால் கறவை அளவு குறைந்து, மாடுகளுக்கு சிகிச்சை செலவும் அதிகரித்துள்ள நிலையில், பால் பணம் கொடுக்காததால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனா்.
500 சங்கங்களிலும் சுமாா் 60,000 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 75 சதவீத விவசாயிகள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பாலில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் சமாளித்து வருகின்றனா். 40 நாள்களுக்கு மேலாகப் பால் பணம் வழங்கப்படாததால், உறுப்பினா்களில் 80 சதவீதம் போ் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். இதனால் உடனடியாக நிலுவைப் பணத்தை வழங்கவும், இனிமேல் நிலுவை இல்லாமல் பணத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஈரோடு ஆவின் பொது மேலாளா் சுபா நந்தினி கூறியதாவது:
மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலைத் தொடா்ந்து சில சங்கங்களுக்கு 2 வார நிலுவைப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சங்கங்களுக்கு 40 நாள் வரை பால் பணம் நிலுவை இருக்கிறது. அனைத்து சங்கங்களுக்கும் விரைவில் பால் பணம் நிலுவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.