ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள்: ஈரோடு மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு

மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
பேருந்துகள்.
Updated On :6 செப்டம்பர் 2020, 10:57 am

DIN

மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துக்கழக ஈரோடு மண்டலத்தில் 30 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் கரோனா பரவல் அதிகமானதால் ஜூன் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயங்கின, 31ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் அரசு அனுமதியை தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. திங்கள்கிழமை(செப்.7)முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க  அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஈரோடு மண்டலத்தில் இருந்து 30 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் சுமார் 800 பேருந்துகள் உள்ளன. 1 ஆம் தேதி முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் 90 நகர பேருந்துகள், 30 புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 

திங்கள்கிழமை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கூடுதலாக 150 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு பேருந்துகளில் அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 120 பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 270 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அடுத்தடுத்த நாள்களில் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். 

நேரடியாக சென்னைக்கு பேருந்து சேவை இல்லை: ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு மட்டும் தான் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து இயக்கப்படமாட்டது. இதுபோல் கர்நாடக மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்தவும், பயணிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து இருக்கவும், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ளவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக 60 சதவீத பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் பேருந்துகள் ஓடாது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 பேருந்துகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்துக்குள்ளும், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் போன்ற பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்துக்குள் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி கூறியது,  எங்கள் சங்கத்தின் மாநில அமைப்பு முடிவின்படி பேருந்துகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். இரண்டு காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில் மாநில அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. தவிர 60 சதவீத பயணிகளை மட்டும் ஏற்றிச்சென்றால் இழப்பு தான் ஏற்படும். இதனால் பேருந்துகளை இயக்குவதற்கான சூழல் வரும்போது தனியார் பேருந்துகளை இயக்குவோம் என்றார்.

 20 மினி பேருந்துகள் இயக்கம்: இதுகுறித்து ஈரோடு மாவட்ட மினி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயராமன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 136 மினி பேருந்துகள் உள்ளன. இதில் ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் 65 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்போது மாவட்டம் முழுவதும் 20 மினி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதில் ஈரோடு நகரில் 10 பேருந்துகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 10 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.