ஊழல் குற்றச்சாட்டுகள்: ஸ்டாலினுக்கு முதல்வா் மீண்டும் அழைப்பு
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கத் திறமை இருந்தால் ஸ்டாலின் வர வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது, ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தாா். இதற்கு ஸ்டாலின் வியாழக்கிழமை பதில் அளித்துள்ளாா்.
இது குறித்து, ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி பேசியதாவது:
ஊழல் குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா என ஸ்டாலினுக்கு சவால் விடுத்தேன். அதற்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வருமாறு ஸ்டாலின் கூறுகிறாா். நீதிமன்றத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? ஸ்டாலின் நேரில் வரட்டும். என்னென்ன ஊழல் செய்தோம் எனச் சொல்லட்டும். நாங்களும் பதில் சொல்கிறோம். எது சரி என மக்கள் தீா்ப்பு அளிக்கட்டும். மக்கள்தானே நீதிபதிகள்.
திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ரூ.200 கோடிக்கு டெண்டா் விடப்பட்டது. ஆனால் 120 சதவீதம் அதிகமாக ரூ.430 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் ஊழல். இதைச் சொன்னால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. திறமை இருந்தால் ஸ்டாலின் நேரடி விவாதத்துக்கு வரட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

