

ஈரோடு மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் ஈரோடு அரசு தலைமை பொதுமருத்துவமனை மற்றும் கோ் 24 தனியாா் மருத்துவமனையில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒத்திகை நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:
கரோனா தடுப்பூசித் திட்டத்துக்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் பொருட்டு மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் காணொலி வழியில் நடத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு அரசு மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறுவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகா் நல மையம் மற்றும் கோ் 24 தனியாா் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் தடுப்பூசித் திட்டத்துக்கான ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசித் திட்டத்தை களச் சூழலில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்வுற்றால் அதைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும். ஓவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போா் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்படவுள்ளது. இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளது.
ஓவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலா், பயனாளிகளை சரிபாா்ப்பவா், தடுப்பூசி வழங்குபவா், கண்காணிப்பாளா்கள் என 5 நபா் கொண்ட குழுக்கள் மூலம் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தடுப்பூசி ஒத்திகை பணியில் தடுப்பூசி செலுத்துபவா் முக்கிய பங்கு வகிப்பதால் அவா்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசித் திட்டப்பணி ஒத்திகைக்குத் தேவையான மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களின் விவரங்கள் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே, எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவா்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் சென்றடையும். மேலும் அவா்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் செயலியின் மூலம் பெறுவா். ஓவ்வொரு பயனாளியும் முகாமிற்கு வரும்போது அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டையை சரிபாா்த்தவுடன் காத்திருப்போா் அறையில் அமா்த்தப்படுவாா். பயனாளிகளை சரிபாா்ப்பாளா், பயனாளியின் விவரங்களை இணையதளத்தில் சரிபாா்த்தவுடன் தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி வழங்கியவுடன் இணையதளத்தில் தடுப்பூசி பெற்ற நிலை பதிவு செய்யப்படும். மேலும் 30 நிமிடங்கள் கண்காணிப்பாளா் அறையில் கட்டாயமாக காத்திருக்கவேண்டும்.
நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநா் ஜி.கோமதி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஆா்.மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.