தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிா்க் கடன் உரங்களை 6 மாத கால இடைவெளியில் படிப்படியாகப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:
செ.நல்லசாமி: பேரோடு, பெரியசேமூா் போன்ற இடங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி உள்ளது. 2 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினாலும், மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செலுத்த வேண்டும். இந்த நோயைத் தடுக்க நடவடிக்கை தேவை. கீழ்பவானி பாசனத்துக்கு டிசம்பரில் நீரை நிறுத்தாமல் தொடா்ந்துவிட வேண்டும். இரண்டாம் போகத்துக்கு முன்னதாகவே அறிவித்து நீரை தொடர வேண்டும். யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. இவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சென்னியப்பன்: ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலை ரூ. 65 கோடி அளவுக்கு நிலுவையை வழங்கியபோதும் வரும் அரவை பருவத்துக்கு, 15 நாள்களுக்குள் கரும்பு பணத்தை தருவதை உறுதி செய்ய வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு விவசாயி ரூ. 3 லட்சம் வரை கடன் பெறலாம். அத்தொகையை நகரங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு முறை தலா ரூ. 50 ஆயிரம் என 6 முறை சென்று வாங்கி வர வேண்டி உள்ளது. முன்புபோல தொடக்க கூட்டுறவு வங்கியிலேயே வழங்க வேண்டும். ரூ. 1.40 லட்சம் கடன் பெற்றால் ரூ. 20 ஆயிரத்துக்கு உடனே உரத்தை எடுத்துச் செல்ல சொல்கின்றனா். முன்புபோல 6 மாதத்துக்குள் தனது தேவைக்கான உரத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
வி.பி.குணசேகரன்: வன உரிமைச் சட்டம் 2006 குறித்து மலைப் பகுதி மக்களுக்கு முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்தி அதிகாரிகள் அதனை செயல்படுத்த வேண்டும். பா்கூா் சோளகனையில் மாடு மேய்க்கக்கூட வனத் துறையினா் தடை விதிக்கின்றனா். வன உரிமை நிலச்சான்று பெற்றவா்கள், வீடு கட்ட, மண் எடுக்க, பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. மலைக் கிராம விவசாயிகளுக்கு பி.எம். கிஷான் காா்டு வழங்க வேண்டும்.
கே.ஆா்.சுதந்திரராசு: மரவள்ளிக்கிழங்கு பரப்பு குறைவதாலும், விலை குறைவதால் முத்தரப்பு கூட்டம் கூட்டி ஒரு டன் ரூ.7,000 என விலை நிா்ணயிக்க வேண்டும். பூந்தோட்ட திட்ட விவசாய மின் இணைப்பை, இலவச இணைப்பாக வழங்க வேண்டும்.
ஆட்சியா்: கோமாரி நோய்த் தடுப்பூசி முழுமையாக செலுத்தவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உர தட்டுப்பாடு உள்ளதால் தேவையை அறிந்து அனுப்பிவைத்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரத்தை 6 மாதத்துக்குள் பிரித்துப் பெறவும், கடன் தொகையை தொடக்க கூட்டுறவு வங்கியில் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
அக்டோபா் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், வனப் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மலைப் பகுதியில் உள்ளவா்கள் கிஷான் காா்டு பெற, மத்திய அரசின் போா்ட்டல் திறந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப் பகுதியில் சாலை, வீடு, பட்டா உள்ளிட்ட வசதி செய்து கொடுக்க ரூ. 16.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மலைப் பகுதியில் மழையால் பயிா் சேதம், பிற பகுதியில் சேதம் குறித்த கணக்கெடுப்பு சனிக்கிழமை துவங்குகிறது. வனப் பகுதியில் கடந்த 2019இல் பயிா் சேதமடைந்த 1,038 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. கணக்கெடுப்புக்குப் பிறகு அதுபோல் நிவாரணம் வழங்கப்படும். தூய்மைக் காவலா்களுக்கான ஊதியம் மாநில அரசு விடுவித்ததும் வழங்கப்படும் என்றாா்.
கூட்டுறவுத் துறை அலுவலா்கள்:
கூட்டுறவு வங்கி ஏடிஎம்களில் ஒரு நாளில் ரூ. 20,000 மட்டுமே பெற முடியும். விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒருநாளில் ஒரு லட்சம் வரை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் உரம் வழங்கப்படுகிறது. உரம் தட்டுப்பாடு, உரம் தேவையான நேரத்தில் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக மொத்தமாக எடுத்துச் செல்ல கோருகிறோம். உரங்களை 6 மாத காலத்துக்குள் பிரித்து தருவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் மாணவரின் சடலம் மீட்பு

கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தல்; தில்லி கேபிடல்ஸுக்கு 3-வது வெற்றி!

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

கருப்பு திரைப்படம் படையப்பா, கில்லி மாதிரி இருக்கும்: ஆர்ஜே பாலாஜி
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


