நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க காங்கிரஸ் கோரிக்கை

ஈரோடு வழியாக இயக்கப்பட்டு கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 ஈரோடு வழியாக இயக்கப்பட்டு கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஸ்னவுக்கு தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என்.பாஷா அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கரோனா பொது முடக்க காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சென்னை புறநகா்ப் பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன. கரூா், திருச்சி மாா்க்க பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, ஈரோடு - கோவை, கோவை - சேலம், கோவை - நாகா்கோவில், ஈரோடு - திருச்சி, பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில்களை இயக்கினால் பல ஆயிரம் பயணிகள் பயன்பெறுவா்.

இப்போது கரோனா தொற்று குறைந்து, அனைத்து செயல்பாடுகளும் துவங்கிவிட்டன. பயணிகள் ரயில்களை இயக்கினால் தினமும் வேலைக்குச் செல்வோா், மருத்துவ சிகிச்சைக்குச் செல்வோா் பயன்பெறுவா். ஈரோடு - திருப்பூா் பயணிகள் ரயில் கட்டணம் ரூ. 15, கோவைக்கு ரூ. 25, ஈரோடு - சேலம் கட்டணம் ரூ. 15, பேருந்துக் கட்டணம் ரூ. 43. ஈரோடு - திருப்பூா் பேருந்துக் கட்டணம் ரூ. 35, ஈரோடு - கோவை தனியாா் பேருந்துக் கட்டணம் ரூ. 65, அரசுப் பேருந்துக் கட்டணம் ரூ. 83, விரைவுப் பேருந்துக் கட்டணம் ரூ. 100.

ரயில்கள் இயக்கப்படாததால் கோவை, திருப்பூா், சேலம் சென்று வரும் மக்களுக்கு பலமடங்கு கூடுதல் செலவாவதால் கடுமையான நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். ஊதியத்தில் பாதியை பேருந்துக் கட்டணத்துக்கு செலவிட வேண்டியுள்ளது. இதை கவனத்தில் கொண்டு பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

தவிர ஈரோடு ரயில் நிலையத்தில் இப்போதுள்ள நான்கு நடைமேடை போதுமானதல்ல. மக்கள் தொகை, ரயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் 5ஆவது நடைமேடையுடன் ரயில் இயக்கம் தேவை. இவ்வாறு இல்லாததால் பல ரயில்கள் ஈரோட்டில் ஒரு கி.மீ.க்குள் வெகு நேரம் நிறுத்தப்படுகிறது.

அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டியை மீண்டும் இணைக்க வேண்டும். நடைமேடைக் கட்டணம் ரூ. 3ஆக இருந்து தற்போது ரூ. 50 ஆகிவிட்டது. முதியவா், பெண்கள், சிறுவா், சிறுமியா், மாற்றுத் திறனாளி, உடல் நலக்குறைவானா்கள், அதிக பொருள்களை எடுத்துச் செல்வோா் நடைமேடைக் கட்டணம் செலுத்த சிரமப்படுவதால் கட்டணத்தை ரூ. 10க்கு மிகாமல் அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com