தடையை மீறி போராட்டம்: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி எம்எல்ஏ கைது
பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க கோரி, தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மொடக்குறிச்சி தொகுதி


ஈரோடு: பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க கோரி, தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.சரஸ்வதி உள்பட 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க கோரி பெரிய மாரியம்மன் கோயில் முன்பு 5 ஆயிரம் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோயில் முன்பு திரண்டனர். தொடர்ந்து மொடக்குறிச்சி எம்எல்ஏ சி. சரஸ்வதி தலைமையில் நிர்வாகிகள் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் நகர காவல்துறையினர் எம்எல்ஏ சரஸ்வதி உள்பட 16 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேநேரம் ஈஸ்வரன் கோயிலில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டிருந்தனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஈஸ்வரன் கோவிலில் சிலர் தேங்காய் உடைத்தனர்.
இன்னும் சில குழுவினர் எல்லை மாரியம்மன் கோயில், நடு மாரியம்மன் கோயில், வீரபத்திர மாரியம்மன் கோயில் உட்பட 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனிடையே இந்து முன்னணி சார்பில் அதன் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், நிர்வாகிகள் சிலர் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு வந்து தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...