'சங்க இலக்கியங்களை படித்தால் தான் சொல்வளம் பெருகும்'

பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களை படிக்கும்போது சொல்வளம் பெருகும் என அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியுள்ளார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் ப.க.பொன்னுசாமியின் படைப்புலகம் என்ற நூல் வெளியீட்டு விழா.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் ப.க.பொன்னுசாமியின் படைப்புலகம் என்ற நூல் வெளியீட்டு விழா.
Updated on
1 min read

ஈரோடு: பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களை படிக்கும்போது சொல்வளம் பெருகும் என அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியுள்ளார்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் ப.க.பொன்னுசாமியின் படைப்புலகம் என்ற நூல் வெளியீட்டு விழா, ஈரோடு புத்தகத் திருவிழா நூல் வெளியீட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பேராசிரியர் கா.செல்லப்பன் தலைமை வகித்தார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பொதுமேலாளர் தி.ரத்தினசபாபதி வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.குழந்தைவேல், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் பேசினர்.

முதல் பிரதியை பெற்றுக்கொண்ட அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது: 

படைப்பிலைக்கியவாதிகளுக்கு முறையான படிப்பு மிகவும் அவசியம். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சங்க இலக்கியங்களை படிக்கும்போதுதான் சொல்வளம் பெருகும். 

படைப்பாளிகளுக்கு பரிசுகளும், விருதுகளும் அங்கீகாரம் மட்டும் தான். இதனால் எழுத்துகளை நேசிக்கும், போற்றும் வாசகர்களை பெற்றிருப்பதை எழுத்தாளர்கள் தங்களுக்கான உண்மையான பரிசு மற்றும் விருதுகளாக கருத வேண்டும் என்றார்.

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.கே.பொன்னுசாமி பேசியதாவது: 

அறிவியலையும், இலக்கியத்தையும் இணைத்துப் படிக்கும் முயற்சியில் நான் வெற்றிபெற்றுள்ளேன். ஆனால் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என 35 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை. தமிழ்மொழி அறிவியல், கணிதம் ஆகியவற்றில் முழுமையாக பயன்படுத்தப்பட்டு உலகத்தோடு போட்டிபோடும் நிலை வர வேண்டும்.  
 
படைப்புகளில் நிகழ்கால சம்பவங்களை விறுவிறுப்பாக பதிவு செய்வதன் மூலம் வாசகர்களை ஈர்க்க முடியும்.  படைப்பாளர்கள் கருத்துகளை தேக்கிவைத்துக்கொண்டு, வாய்ப்புக்கிடைக்கும் போது எழுதி மக்களிடம் சேர்க்க வேண்டும். அந்த படைப்புகள் மக்களை படிக்கத்தூண்டுபவையாக இருக்க வேண்டும் என்றார்.  

சண்முகம் சரவணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நன்றி கூறினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com