'அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லை': போராட்டத்தை அறிவித்த நியாய விலைக்கடை பணியாளர்கள்

அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லாததால் திட்டமிட்டபடி சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.
File Pic
File Pic

அமைச்சரின் பேச்சில் நம்பிக்கையில்லாததால் திட்டமிட்டபடி சென்னையில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறையின் கீழ் பணியாற்றும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு உத்தரவை ரத்து செய்ய  வலியுறுத்தி சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (மே 13) மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நியாயவிலைக்கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்தக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய உயர்வும், அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வும், ஊதிய உயர்வும் அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில், நியாய விலைக் கடை ஊழியர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். கரோனா நெருக்கடி காலத்திலும் தாங்கள் அயராது பணிபுரிந்ததாகவும், இக்கட்டான நேரத்திலும் பொதுமக்கள் நலனுக்காக பணியாற்றிய தங்களுக்கு அகவிலைப்படி உயர்வை அரசு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கண்டிப்பாக உயர்த்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.  

புதன்கிழமை அவர் மதுரையில் அளித்த பேட்டியில், “அகவிலைப்படியை பொறுத்த அளவில் அது பொதுவான விஷயம் தான். விலைவாசிக்கு உயர்வது போல் அரசு ஊழியர்களுக்கு உயர்த்துவது போல நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உயர்த்த வேண்டும். கண்டிப்பாக உயர்த்தலாம் என தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை இதற்கான அரசு அறிவிப்பு வரவில்லை.

இதனிடையே இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை (மே13) கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “இந்த விஷயத்தில் அமைச்சரின் பேச்சை நாங்கள் நம்பவில்லை. அகவிலைப்படி உயர்வு கட்டாயம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த மாதம் அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி சென்னையில் கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான நியாய விலைக்கடைப் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com