நூல் விலை உயர்வு: எடப்பாடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, எடப்பாடி பகுதி அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒரு வார கால தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
எடப்பாடியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, எடப்பாடி பகுதி அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒரு வார கால தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளாண்டி வலசு, கவுண்டம்பட்டி, தாவான்ந்தெரு சின்ன மணலி, க.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துண்டு உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜவுளி உற்பத்திக்கு மூலாதாரமான  நூலின் விலை அண்மை காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 10 மற்றும் 25 என் கொண்ட கச்சா நூலின் விலை அன்மையில் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எடப்பாடி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் புதன்கிழமையன்று மாலை எடப்பாடியில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து அதிகரித்துவரும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எடப்பாடி பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று (வியாழன்) முதல் வரும் 18ஆம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் எடப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி ஜவுளி கூடங்கள் வேலை நிறுத்தத்தத்தை தொடங்கின. இதனால் அந்நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தினை காக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com