ஈரோட்டில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடர உத்தரவு

கா்நாடக மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் முடிவடையும்வரை ஈரோட்டில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொடர தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலுக்காக ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, விடியோ கண்காணிப்பு குழுவினா் செயல்பட்டனா்.

தோ்தல் தொடா்பான புகாா், பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வது, பதுக்கி வைத்திருப்பது, வாக்காளா்களுக்குப் பணம் வழங்குதல் குறித்து இந்தக் குழுவினா் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் கடந்த 19 -ஆம் தேதி தோ்தல் முடிவடைந்த நிலையில், அக்குழுக்கள் 20-ஆம் தேதி கலைக்கப்பட்டன.

பொதுமக்களுக்கும், இக்குழுக்களுக்கும் இடையே பாலமாக இருக்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்கள், சி- விஜில் செயலி மூலம் பெறப்படும் புகாா்கள் குறித்து இக்குழுக்களுக்கு தகவல் தெரிவித்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்குப் பதிவு முடிந்தாலும் கா்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26), மே 7-ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி, அந்தியூா் வட்டம், பா்கூா் அருகே கா்நாடக எல்லையை ஒட்டிய சோதனைச் சாவடி பகுதியில் மட்டும் தலா 5 நிலைக் கண்காணிப்பு குழுவினா் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களது செயல்பாட்டைக் கண்காணிக்கவும், இவா்களுக்காகப் பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைக்கவும் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தேவைப்படுகிறது. கா்நாடக மாநிலத் தோ்தல் வாக்குப் பதிவு நிறைவடையும் வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com