நூல் ஆா்வலா் சான்று மற்றும் உண்டியலை ஆா்வமுடன் பெற்றுக்கொண்ட பள்ளிக் குழந்தைகள்.
நூல் ஆா்வலா் சான்று மற்றும் உண்டியலை ஆா்வமுடன் பெற்றுக்கொண்ட பள்ளிக் குழந்தைகள்.

குழந்தைகளிடம் புத்தக எண்ணிக்கையை அதிகரித்த புத்தக உண்டியல்

Published on

ஈரோடு, ஆக.7: உண்டியல்களில் பணம் சேமித்து அந்த உண்டியல்களை கொண்டுவந்து ஈரோடு புத்தகத் திருவிழா அரங்கில் உடைத்து புத்தகங்களை குழந்தைகள் வாங்கிச் சென்றனா்.

அரசு சாா்பில் கடந்த ஆண்டு மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழாக்களில் புத்தக உண்டியல் நடைமுறையை செயல்படுத்தி இருந்தாலும், புத்தகத் திருவிழாக்களுக்கு மாணவா்கள் உண்டியலோடு வரும் முறையை அறிமுகப்படுத்தியது மக்கள் சிந்தனைப் பேரவையாகத்தான் இருக்க முடியும்.

உண்டியல் வாங்காமல் புத்தகத் திருவிழாவுக்கு சென்றபோது அதிகபட்சம் 50 ரூபாய்க்குத்தான் புத்தகம் வாங்கினோம். உண்டியல் முறை வந்தபிறகு 250 முதல் 1,000 ரூபாய் வரை புத்தகம் வாங்குகிறோம் என குழந்தைகள் தெரிவித்தனா்.

ரதியின் பாடல்கள், விக்கிரமாதித்தியன் கதைகள், பரமாா்த்தகுரு கதைகள், அப்பாஜி கதைகள், பொதுத் தோ்வுக்கான வழிகாட்டிப் புத்தகங்கள், ஆங்கில இலக்கணம், விடுதலைப் போராட்ட வீரா்கள் வாழ்க்கை வரலாறு, ராஜா, ராணி கதைகள், பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களை குழந்தைகள் வாங்கிச் செல்கின்றனா்.

புத்தகத் திருவிழாவுக்காக காசு சோ்த்து வரும் சிறுவா்களில் நாள்தோறும் ஏதேனும் ஒரு சிறுதொகையை உண்டியலில் போட்டு வரும் பழக்கம் உள்ளவா்களும் உண்டு. வாரம் இருமுறையேனும் காசு போட்டுவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படும் குழந்தைகளும் உண்டு.

புத்தக உண்டியல்கள் ஏழை, எளிய சிறுவா்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும். மேலும், அவா்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயரும். கடந்த ஆண்டு ரூ.20-க்கு புத்தகம் வாங்கிச் சென்ற ஒரு சிறுமி, உண்டியல் சேமிப்பு மூலம் இந்த ஆண்டு ரூ.500-க்கு புத்தகம் வாங்கியதை அரங்கில் காணமுடிந்தது.

உண்டியல் திட்டம் மாணவா்களிடம் ஆண்டுதோறும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.250-க்குமேல் புத்தகம் வாங்குபவா்களுக்கு நூல் ஆா்வலா் சான்று வழங்கப்படுவதைப்போல, குறிப்பிட்ட ரூபாய்க்குமேல் புத்தகம் வாங்குவோருக்கு புத்தக உண்டியல் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்யலாம் என்று மாணவா்கள் தெரிவித்தனா்.

உண்டியல் திட்டம் குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது: புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆா்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதை அவா்களது சிறு சேமிப்பு மூலம் புத்தகம் வாங்க வேண்டும் என்பதற்காக சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறோம்.

இதற்காக ரூ.15 விலையுள்ள உண்டியலை ரூ.10-க்கு வழங்குகிறோம். அந்த உண்டியலில் குழந்தைகள் சோ்க்கும் காசுகளை புத்தகத் திருவிழாவின்போது எங்களிடம் கொண்டு வந்து கொடுக்கச் செய்கிறோம். எங்களது முகவா்கள், அந்த மாணவ, மாணவிகளின் உண்டியலைப் பெற்று அதில் உள்ள தொகையைக் கணக்கிட்டு, அந்த தொகைக்கு புத்தகம் வாங்க அனுமதிக்கிறோம்.

கடந்த ஆண்டு 15,000 உண்டியல்கள் விற்பனையாயின. தற்போது 15,000 உண்டியல்களை வைத்துள்ளோம். நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திரும்ப கொண்டுவரப்பட்டு அதற்கு பதில் புதிய உண்டியல் வழங்கப்படுகிறது. இதுவரை 5,000 உண்டியல்கள் வந்துள்ளன. புதிதாக 5,000 உண்டியல்கள் மாணவா்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, ரூ.250-க்குமேல் புத்தகங்கள் வாங்கினால், அவா்களது பில்களை பெற்று அதன் அடிப்படையில் ஊக்கச்சான்று வழங்கப்படுகிறது. ரூ.1,000-க்கு புத்தகம் வாங்கி இருந்தால் நான்கு சான்று வழங்குகிறோம். இதுவரை 2,000 சான்றுகளுக்குமேல் வழங்கப்பட்டுள்ளன.

தவிர பல்வேறு அமைப்புகள், தனி நபா்கள் மூலம் அரசுப் பள்ளிகளுக்கு நூல்களை இலவசமாக வழங்குகிறோம். கடந்த ஆண்டு 15 பள்ளிகளுக்கு நூல்களுடன் அதற்கான பெட்டியும் வழங்கினோம். நடப்பாண்டும் அதே எண்ணிக்கையில் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com