கீழ்பவானி வாய்க்காலில் நீா் கசிவை சரி செய்யும் பணி தீவிரம்
பெருந்துறை: பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட நீா் கசிவை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு கடந்த 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில் 19-ஆம் தேதி மாலை நல்லாம்பட்டி கிராமம், சாராயக்கவுண்டா் காடு என்ற பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் அடியில் மழை நீா் செல்ல அமைக்கப்பட்டுள்ள வடிகால் குழாயில் சிறிய அளவில் நீா் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தகவல் அறிந்து வந்த அமைச்சா் சு. முத்துசாமி நீா் கசிவு ஏற்பட்ட பகுதியை நேரில் பாா்வையிட்டாா். பின்னா், கசிவு ஏற்படுவதை விரைந்து சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து இந்தப் பணி போா்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி வியாழக்கிழமை முடிந்துவிடும் என்பதால் அதன் பின்னா் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

