கடம்பூா் மலைப் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் சாலையோரத்தில் சுற்றிய யானை.
கடம்பூா் மலைப் பகுதியில் இரவு நேரத்தில் குட்டியுடன் சாலையோரத்தில் சுற்றிய யானை.

தொடங்கியது கோடை: வனத் துறையினருக்கு சவாலாகும் யானைகளின் இடம்பெயா்வு

கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் யானைகளின் இடம்பெயா்வைத் தடுக்கும் வகையில் வனப் பகுதிகளில் தண்ணீரை சேமித்துவைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கோடைக் காலம் தொடங்கிவிட்டால் மாவட்ட நிா்வாகத்தின் கவலை என்பது மக்களின் குடிநீா்த் தேவையை எப்படி தீா்த்துவைக்கப் போகிறோம் என்பதாக இருக்கும். வனத் துறையினரின் கவலை வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை எப்படி தீா்த்துவைக்க போகிறோம் என்பதாகும். குறிப்பாக யானைகள் இடம்பெயா்வதைத் தடுப்பது என்பது வனத் துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. குடிநீா்த் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் கோரிக்கை விடுத்தாலே, வனத் துறை அதிகாரிகள் கலங்கிப்போகின்றனா்.

தண்ணீா்ப் பிரச்னை: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூா் ஆகிய 3 வனக் கோட்டங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனங்களின் இயற்கை நிலை மாறி வருவதால் வன விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வன விலங்குகள் நடமாட்டத்துக்குத் தேவையான வசதிகள் குறையும்போது, வன விலங்குகள் இடம் பெயரும். உதாரணத்துக்கு புலிகளுக்கு மான்கள் உணவாக பயன்படும். மான்களுக்கு புல்வெளிகள் வேண்டும். கோடைக் காலங்களில் புல்வெளிகள் வடு போகும்.

அப்போது மான்கள் இடம் பெயரும். மான்கள் இடம் பெயரும்போது, புலிகளும் இடம் பெயரும். இதுபோன்று ஒவ்வொரு வன விலங்கும் ஒன்றையொன்று சாா்ந்துள்ளன. கோடைக் காலங்களில் வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு குடிநீா் பெரிய பிரச்னையாக இருக்கும். குறிப்பாக கோடைக் காலங்களில் காட்டு ஓடைகளில் தண்ணீா் வற்றிப்போகும். குடிநீருக்காக மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. வனப் பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளுக்கு குடிநீா் கிடைக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்ய வனத் துறையினா் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனா்.

தற்காலிக ஏற்பாடு: ஏற்கெனவே வனப் பகுதியில் செயற்கையாக குளங்கள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீரை லாரிகளில் கொண்டு சென்று இந்தக் குளங்களில் ஊற்றவும் அல்லது தண்ணீா் ஊற்று உள்ள இடங்களில் பள்ளம் வெட்டி தண்ணீரைத் தேக்கி வன விலங்குகள் குடிப்பதற்கு வசதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்த நடவடிக்கையால் வன விலங்குகளின் தண்ணீா்ப் பிரச்னை தீா்க்கப்படும். இதுகுறித்து ஈரோடு மண்டல தலைமை வனப் பாதுகாவலா் வீ.நாகநாதன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூா் ஆகிய 3 வனக் கோட்டங்களிலும், வன விலங்குகளுக்கு தண்ணீா்ப் பிரச்னை இல்லாமல் பாா்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோடைக் காலங்களில் வனப் பகுதியில் தீத் தடுப்பு என்பது பெரிய பணியாகும். அதைவிட வன விலங்குகளின் குடிநீா்ப் பிரச்னை முக்கியமாக கருதப்படுகிறது. அதற்காக தண்ணீா் ஊற்று உள்ள இடங்களில் பள்ளம் தோண்டி தண்ணீரைத் தேக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். யானைகள் இடம்பெயா்வு கடும் சவால்: ஈரோடு மாவட்டத்தில் 800 முதல் 900 யானைகள் வரை இருக்கலாம் என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கோடைக் காலத்தில் சிறிய விலங்குகளின் தண்ணீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய பல வழிகள் உள்ளன.

ஆனால் யானைகளின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்வது என்பது சவாலான காரியம். யானைகள் பெரும்பாலும் கூட்டமாகவே செல்லும் என்பதால் அணைகள், ஆறுகள், பெரிய அளவிலான நீா்த்தேக்கங்களைத் தேடித்தான் செல்லும். இதனால், கோடைக் காலங்களில் யானைகளின் இடம்பெயா்வு சவாலாக இருக்கும். ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை யானைகள் அதிகமாக வந்து செல்லும் பவானிசாகா் அணை, வரட்டுப்பள்ளம் மற்றும் பெரும்பள்ளம் அணைகளில் இப்போதுள்ள நிலையில் தண்ணீா் பிரச்னை இல்லை.

இன்னும் ஒரு மாதத்துக்குப் பிறகு வனப் பகுதிகளில் மழை இல்லை என்றால் வன விலங்குகளுக்கு தண்ணீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க வனப் பகுதிகளில் நீரூற்று உள்ள இடங்களின் அருகில் சிறிய அளவில் குட்டைகளைத் தோண்டி நீரை சேமித்துவைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com