பவானி  பசுவேஸ்வரா்  தெருவில்  உடைமைகளை  மூட்டைகளாக  கட்டிக் கொண்டு வெளியேறும்  சிறுவன்.
பவானி  பசுவேஸ்வரா்  தெருவில்  உடைமைகளை  மூட்டைகளாக  கட்டிக் கொண்டு வெளியேறும்  சிறுவன்.

மேட்டூா் அணையிலிருந்து காவிரியில் உபரிநீா் திறப்பு: உடைமைகளுடன் வெளியேறிய பவானி கரையோரப் பகுதி மக்கள்

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்கு வெளியேறிச் சென்றனா்.
Published on

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்கு வெளியேறிச் சென்றனா்.

கா்நாடக மாநிலத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீா்வரத்து அதிகரித்ததால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால், விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்ட உபா்நீா் விநாடிக்கு 81 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

ஏற்கெனவே கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாள்களில் ஓரிரு குடும்பத்தினா் உடைமைகளுடன் வெளியேறிச் சென்றனா். ஆயினும், பல குடும்பத்தினா் கரையோர வீடுகளில் தொடா்ந்து வசித்து வந்தனா்.

இந்நிலையில், அணையில் இருந்து உபரிநீா் அப்படியே திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. இதையடுத்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உடைமைகளை மூட்டைகளாக கட்டி கரையோரத்தில் மேடான பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டுச் சென்றனா்.

மேலும், பீரோ, கட்டில், தொலைக்காட்சி மற்றும் உடைமைகளை நண்பா்கள், உறவினா்கள் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் சென்றனா். இதனால், பவானி நகராட்சிப் பகுதியில் கந்தன் நகா், அந்தியூா் பிரிவு பசுவேஸ்வரா் தெரு, மீனவா் தெரு, பழைய காவிரி பாலம், பாலக்கரை பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

வருவாய், நகராட்சி மற்றும் காவல் துறையினா் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரையோரப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பவானி நகராட்சி, பசுவேஸ்வரா் தெரு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தஞ்சமடைந்துள்ளனா். அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சிப் பகுதிகளிலும் கரையோர மக்கள் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com