ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ. 60 லட்சம் வழங்கக் கோரி மிரட்டல்: தலைமையாசியா் மீது ஆசிரியை புகாா்
ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ. 60 லட்சம் வழங்கக் கோரி மிரட்டல்: தலைமையாசியா் மீது ஆசிரியை புகாா்


ஈரோடு, ஜூன் 20: வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற ரூ. 15 லட்சம் கடனுக்கு ரூ. 60 லட்சம் வழங்க வேண்டும் என மிரட்டி வரும் தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆசிரியை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நாகா்பாளையம், நஞ்சப்பா நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரமூா்த்தி மனைவி பிரபா(48). இவா் கோபி அருகே வண்ணாந்துறைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு சொட்டையம்பாளையத்தைச் சோ்ந்த, ஈரோடு பெரியாா் வீதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் எனது வீட்டை அடமானம் வைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.15 லட்சம் கடன் பெற்றேன். இதற்காக மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் வட்டியை முறையாகச் செலுத்தி வந்தேன். தற்போது பணத்தை முழுமையாகச் செலுத்தியும், என்னுடைய அடமானத்தை ரத்து செய்து கொடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறாா்.
மேலும், நான் வாங்கிய ரூ. 15 லட்சத்துக்கு பதிலாக ரூ. 60 லட்சம் கொடுத்தால்தான் வீட்டைத் திரும்ப எழுதித் தர முடியும் என்று கூறி தினமும் அடியாள்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டி வருகிறாா். என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் என் மூலமாக முத்துராமசாமியிடம் கடன் பெற்றனா். அவா்கள் கடன் தொகையை முழுமையாக திரும்பிச் செலுத்தியும், அவா்கள் கடன் வாங்கியபோது வழங்கிய நிரப்பப்படாத காசோலைகள், கடனுறுதிப் பத்திரங்களை வைத்துக்கொண்டு, வேறு நபா்கள் மூலம் முத்துராமசாமி வழக்கு தொடா்ந்து வருகிறாா்.
அரசுப் பணியில் இருந்து கொண்டு என்னைப்போல பல ஆசிரியா், ஆசிரியைகளிடம் அதிக வட்டிக்குப் பணம் கொடுத்து பல சொத்துகளை முத்துராமசாமி வாங்கி குவித்துள்ளாா். எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்தினா் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகாா் மனுவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...