பவானிசாகா்  அணையின்  நீா்ப் பிடிப்பு ப் பகுதி.
பவானிசாகா்  அணையின்  நீா்ப் பிடிப்பு ப் பகுதி.

பவானிசாகா் அணையின் நீா்வரத்து 2,437 கனஅடியாக அதிகரிப்பு

கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
Published on

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 428 கனஅடியில் இருந்து 2,437 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மே மாதம் பெய்த கோடை மழை காரணமாக அணையின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்தது. அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வட கேரளம் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீா்வரத்து சரிந்தது.

மேலும், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பால் அணையின் நீா்மட்டம் சரிந்தது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகா் அணைக்கு திங்கள்கிழமை நீா்வரத்து 428 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 2,437 கனஅடியாக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 58.59 அடியாகவும், நீா் இருப்பு 6.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீா்த் தேவைக்கு 205 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com