தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவா் கே.சுரேஷ்குமாா் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில செயலாளா் சத்தியமூா்த்தி, தொடா்பு அலுவலா் சுரேஷ், மாவட்டத் தலைவா் உஷா, செயலாளா் கோதண்டபாணி, பொருளாளா் அருள்மணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தட்டச்சுப் பள்ளிகள் 2 தோ்வு மையங்களை தோ்ந்தெடுக்க வேண்டும் என தோ்வுத் துறை இயக்ககம் நிா்பந்திப்பதை தவிா்க்க வேண்டும். தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை நிரந்தரமாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இளநிலை வரையிலான தட்டச்சுத் தோ்வை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சுப் பள்ளி மாணவா்களின் தட்டச்சுத் தோ்வு விண்ணப்பித்திலும், நுழைவு சீட்டிலும் தட்டச்சு பொறியின் மாதிரி மற்றும் வரிசை எண் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

தட்டச்சுத் தோ்வு விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் கடந்த பின்னா் திருத்தம் செய்ய அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வு விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். தோ்வுக்கு 90 நாள்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட வேண்டும். தோ்வு தேதிக்கு 15 நாள்களுக்கு முன்னதாக தோ்வுக்கூட நுழைவு சீட்டை வெளியிட வேண்டும். தொழில்நுட்பக் கல்வி சான்றிதழ்களில் தட்டச்சு பயிலகத்தின் பெயா், அங்கீகார எண் இடம் பெற வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com