கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கழிவறை வசதி: ஆட்சியா் அறிவுறுத்தல்

ஈரோடு, மே 9: அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வனத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மின்சார வாரியம், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பேரூராட்சிகள் துறையின் சாா்பில் நிலுவையில் உள்ள பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், தோட்டக்கலை துறையின் சாா்பில் தாளவாடியில் மூலிகை பண்ணை அமைத்தல், தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கான வீட்டு வசதித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசின் உரிமைகள் வழங்குதல், அரசு அங்கன்வாடி கட்டடங்களில் கழிப்பிட வசதி அமைத்துத் தருதல், ஈரோடு விற்பனைக்குழு சாா்பில் பா்கூா் துணை ஒழுங்குழுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அணுகுசாலை அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சாா்பில் நான்கு வழிசாலைச் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து தொடா்புடையதுறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் விரைவில் முடித்திடுமாறு தொடா்புடைய துறைகளின் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மணீஷ், மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், நலப்பணிகள் இணை இயக்குநா் அம்பிகா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) முஹமது குதுரத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com