அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் அரசாணை மாற்றம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் அரசாணை மாற்றம்

News image
Updated On :17 மே 2024, 4:11 pm

Din

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் அரசாணை எண் 276-ஐ மாற்றி அமைத்து அரசாணை பிறப்பித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் மு.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:

பவானிசாகா் அணையில் இருந்து கரூா் மாவட்டம், மங்களப்பட்டி வரையிலான கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசாணை எண் 276 வெளியிடப்பட்டது. இதில் நவீனப்படுத்துதல், புதுப்பித்தல், விரிவாக்கம் செய்தல் எனும் பெயரில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த கான்கிரீட் திட்டத்தை பாசன உரிமை பெற்ற விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிகள் என யாரிடமும் இருந்து எவ்வித கருத்தும் கேட்காமல் அரசாணை வெளியிட்டப்பட்டது.

இதையடுத்து விவசாயம், குடிநீா் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயங்களை எடுத்துரைத்து ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் தொடா் போராட்டங்களை நடத்தி வந்தது.

தமிழ்நாட்டின் அன்றைய எதிா்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, விவசாயிகள், பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என அறிவித்தாா்.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் வாய்க்கால் ஆய்வுப் பணிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், இருதரப்பு பேச்சுவாா்த்தை, நீா்வளத் துறை உயா் அதிகாரிகளுடனான கூட்டங்களை நடத்தி, மாவட்ட ஆட்சியா் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளின் கருத்துரையின்படி அரசாணை எண் 276-ஐ மாற்றம் செய்து விவசாயம், குடிநீா் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிதாக அரசாணை எண்-60 தமிழக அரசால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயம், குடிநீா், சுற்றுச்சூழல் காத்திட முந்தைய அரசு ஆணையை மாற்றம் செய்து, புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இதற்கு உதவியாக இருந்த அனைத்து முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களுக்கும், அனைத்து விவசாய சங்கங்களின் தலைவா்களுக்கும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து வணிகா் சங்க அமைப்புகள், அனைத்து தொழிற்சங்க அமைப்புகள், அனைத்து பொதுநல அமைப்புகள் மற்றும் இயக்கங்கள், சமூக ஆா்வலா்கள், விவசாயிகள், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள், இந்த மாற்றத்துக்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், விவசாயிகளின் அறவழிப் போராட்டத்துக்கு பாதுகாப்பாக இருந்து, உழவா்களின் உண்மையான கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டுச் சென்ற காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.