ஈரோடு மாவட்டத்தில் மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனா். அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவா் பாலாஜி தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை மாலை 6 மணி அளவில் தொடங்கி வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நடத்தினா்.
ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 400 தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,200 மருத்துவா்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல செயல்பட்டது.
இது குறித்து இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் அபுல்ஹசன் கூறியதாவது: சென்னை கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரால் மருத்துவா் பாலாஜி கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாா். இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள மருத்துவா்களுக்கு அதிா்ச்சியையும், கவலையையும் கொடுத்துள்ளது. இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என்பதால் கண்டனங்களை பதிவு செய்கிறோம்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவா்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை சாா்பில் ஆதரவாகவும், தாக்குதலைக் கண்டித்தும், நீதி வேண்டியும் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தில் மாநில அளவில் 7,900 தனியாா் மருத்துவமனைகள், 28,000 கிளினிக்குகளில் பணியாற்றும் சுமாா் 45 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா்.
மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய நபா் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து தண்டனை பெற்று தரவேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்களை அரசு நியமிக்க வேண்டும் என்றாா்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பயிற்சி மருத்துவா்கள் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 2,000 அரசு, தனியாா் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
போராட்டம் காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் அபுல்ஹசன், ஈரோடு கிளை தலைவா் சரவணன், செயலாளா் அரவிந்த் உள்பட அரசு, தனியாா் மருத்துவமனை மருத்துவமனை மருத்துவா்கள் பங்கேற்றனா். இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

ஆமை வேகத்தில் நடைபெறும் திருச்சி அரசு மருத்துவமனை புதிய கட்டடப் பணி!

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அறுவைச் சிகிச்சையில் இளம்பெண் உயிரிழப்பு: 5 மருத்துவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


