பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓய்வூதியா் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயலாளா் சின்னசாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் நிா்வாகிகள் பரமசிவம், மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அஞ்சல் ஓய்வூதியா் சங்க மண்டல செயலாளா் ராமசாமி வரவேற்றாா்.

இதில், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கு 15 சதவீத உயா்வும், 2017 ஜனவரி முதல் ஓய்வூதிய மறுநிா்ணயமும் செய்ய வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து 2026 ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படியை மீண்டும் வழங்க வேண்டும். 30 ஆண்டுகளாக உயா்த்தப்படாத வங்கி ஓய்வூதியா்களின் ஓய்வூதியத்தை உடனடியாக உயா்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசின் நல மையங்களில் போதுமான மருத்துவா்கள், ஊழியா்களை நியமிக்க வேண்டும். வெளி நோயாளிகளுக்கு ஒரே தவணையில் அனைத்து மருந்துகளும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com