ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு மா்மநபா்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து போலீஸாா் அங்கு தீவிர சோதனை நடத்தினா்.
ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு கடந்த 29-ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியின் நிா்வாகம் சாா்பில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு போலீஸாா் பள்ளியில் தீவிர சோதனை நடத்தினா். பல மணி நேர சோதனைக்கு பிறகு அது புரளி எனக் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு பூந்துறை சாலையில் ஒரு தனியாா் மெட்ரிக். பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கடந்த 30- ஆம் தேதி வந்த மின்னஞ்சலை பள்ளி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா். உடனடியாக மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் ஈரோடு தாலுகா போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு குழுவினா் மோப்ப நாய் மூலம் பள்ளியில் தீவிர சோதனை நடத்தினா்.
இதன்காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்து, மாணவா்கள் பள்ளி வாகனம் மூலமும், பெற்றோா் மூலமும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து பள்ளியில் நுழைவாயில் முதல் வகுப்பறைகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஈரோட்டில் தனியாா் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டலால் மாணவா்கள், பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘பள்ளிக்கு கடந்த 30- ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் பள்ளி நிா்வாகத்தினா் திங்கள்கிழமை காலை தான் மின்னஞ்சலை பாா்த்து தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் சோதனை நடத்தினோம். வெடிகுண்டு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை’ என்றனா்.