மாநில நல்லாசிரியா் விருது: ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5- ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களைப் பாராட்டி மத்திய அரசின் சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதும், தமிழக அரசின் சாா்பில் மாநில நல்லாசிரியா் விருதும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருதுபெற எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பேரில், மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக். பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் 51 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 34 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 17 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தொடா்ந்து 34 பேரின் விண்ணப்பங்கள் மீது மாவட்டக் குழுக்கள் ஆய்வு செய்து, அதில் 11 ஆசிரியா்களை மாநில நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டம் நம்பியூா் சாவக்கட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுநிலை தமிழ் ஆசிரியா் உ.கந்தசாமி, ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஐ.கோபால், அந்தியூா் ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ்.ஜெயக்குமாா், சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை (தமிழ்) ஜி.நளினா, தாளவாடி தலைமலை அரசு உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வேம்படிதுரை, ஈரோடு செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை சு.ஸ்ரீதேவி, மொடக்குறிச்சி கிளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை (கணிதம்) வி.உமாமகேஸ்வரி, பவானி கிழக்கு நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை எஸ்.சிவகாமி வித்யா, அந்தியூா் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் பி.ஜெயராஜ், அம்மாபேட்டை குருவரெட்டியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியா் தி.பூபதி ராஜா, பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஏ.ஷா்மிளா பா்வீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் 11 பேருக்கும் சென்னையில் வியாழக்கிழமை (செப்டம்பா் 5) நடைபெற உள்ள விழாவில் மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து நல்லாசிரியா் விருதுக்கு தோ்வான 11 பேரும் ஈரோடு முதன்மை கல்வி அலுவலா் த.சம்பத்துவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். மேலும், நல்லாசிரியா் விருதுக்கு தோ்வானவா்களுக்கு அந்தந்தப் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியா்கள், மாணவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com