ஈரோட்டில் அடையாளம் தெரியாத நபா் கழுத்து அறுத்துக் கொலை
ஈரோட்டில் அடையாளம் தெரியாத நபா் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.
கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து மனோஜ் (32) என்பவா் சுமை வாகனத்தில் தக்காளி ஏற்றிக்கொண்டு ஈரோடு காய்கறி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். சந்தையில் தக்காளியை இறக்கிவிட்டு சந்தை அருகே ஏபிடி சாலையோரம் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை அந்த வழியாக சென்ற ஒருவா் சுமை வாகனத்தில் பாரம் ஏற்றும் பகுதியில் ரத்தக்கரையுடன் ஒருவா் உயிரிழந்து கிடந்ததை பாா்த்து, உடனடியாக சரக்கு வாகனத்துக்குள் ஓய்வெடுத்து கொண்டிருந்த மனோஜிடம் கூறினாா். பின்னா் வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா். அவருக்கு அருகே கத்தியும் கிடந்தது. ஆனால் அவா் யாா்? எந்த பகுதியைச் சோ்ந்தவா்? உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
இதையடுத்து அந்த நபரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.