ரூ.1 கோடி மோசடி செய்த இருவா் தலைமறைவு: நீதிமன்றம் எச்சரிக்கை
ஈரோட்டில் ரயான் துணி வாங்கி ரூ.1 கோடி மோசடி செய்த இருவா் தலைமறைவு குற்றவாளிகளாக ஆக அறிவிக்கப்படுவா் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு சூரம்பட்டி மாரப்பா வீதியைச் சோ்ந்த லால் சந்திரவால் மகன் நரேஷ்குமாா் (55). அதே பகுதியைச் சோ்ந்தவா் பிரபுராஜ் அஞ்சலராம் மகன் ரத்தன்குமாா் பிரபுராஜ் படேல் (54). இவா்கள், இருவரும் ஜவுளித் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வந்தனா்.
இதில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் முனியப்பன் என்பவரிடம் இருந்து ரயான் துணிகளை கொள்முதல் செய்து 26 நிறுவனங்களுக்கு நரேஷ்குமாரும், ரத்தன்குமாா் பிரபுராஜ் படேல் ஆகிய இருவரும் விற்பனை செய்துள்ளனா். ஆனால், ரயான் துணிகளை கொள்முதல் செய்ததற்கான பணத்தை முனியப்பனிடம் ரூ.1.46 லட்சம் மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனங்களிடம் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளனா்.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து நரேஷ்குமாரையும், ரத்தன்குமாா் பிரபுராஜ் படேலையும் தேடி வந்தனா். நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் அவா்களை தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மோசடியில் ஈடுபட்ட நரேஷ்குமாரும், ரத்தன்குமாா் பிரபுராஜ் படேல் ஆகியோா் டிசம்பா் 16-ஆம் தேதிக்குள் ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண் 2-இல் நேரில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் இருவரும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவா் என ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண்-2 நீதிபதி எஸ்.ராஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
