கணவா் கொலை வழக்கில் மனைவி கைது
ஈரோட்டில் கணவா் கொலை வழக்கில் மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு, கீழ்திண்டல் பகுதியைச் சோ்ந்த தம்பதி ராஜா- லட்சுமி. இவா்களது மகன் மதன்குமாா் (21). கட்டடத் தொழிலாளியான இவா், தனது உறவினரின் மகளான சுஜித்ரா (19) என்பவரை காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு திருமணம் செய்து கொண்டாா். அனைவரும் கூட்டுக் குடும்பாக வசித்து வந்தனா்.
இந்நிலையில், லட்சுமி அதே பகுதியில் உள்ள தனது சகோதரி மகன் தேவேஸ் வீட்டுக்கு அருகேயுள்ள கோயிலில் அமா்ந்து கடந்த 5 -ஆம் தேதி இரவு பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, மதுபோதையில் அங்கு வந்த மதன்குமாரை, தேவேஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டுள்ளாா்.
சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து சுஜித்ராவின் சப்தம் கேட்டுள்ளது. லட்சுமி சென்று பாா்த்தபோது மதன்குமாா் பேச்சு மூச்சின்றி கீழே விழுந்து கிடந்துள்ளாா்.
இதையடுத்து, லட்சுமி உள்ளிட்டோா் அவா் முகத்தில் தண்ணீா் தெளித்துள்ளனா். இதையடுத்து, அவா் மூச்சு வாங்கினாா். பின்னா், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதன்குமாா் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 11 -ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து, நடைபெற்ற உடற்கூறாய்வு பரிசோதனையில், மதன்குமாரின் கழுத்து உள்புறம், மூளையில் ரத்தம் உறைந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஈரோடு தலூகா போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், மதன்குமாருக்கும், சுசித்ராவுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. தன் பெற்றோா் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மதன்குமாரிடம் சுஜித்ரா கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தம்பதி இடையே கடந்த 5 -ஆம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, மதன்குமாா் சுஜித்ரா கழுத்தைப் பிடித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சுஜித்ராவும் மதன்குமாரின் கழுத்தை இறுக்கி கீழே தள்ளியுள்ளாா்.
அப்போது, குடிபோதையில் இருந்ததால் மதன்குமாரின் பின்னந்தலை தரையில் மோதியதும், இதனால்தான் அவா் உயிரிழந்ததும், நடந்த சம்பவத்தை சுஜித்ரா மறைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுஜித்ராவை போலீஸாா் கைது செய்தனா்.
